முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியான எடப்பாடி தொகுதியில் உள்ள அதிமுகவை சேர்ந்த 50 பேர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு தயாராகி வருகிறது. திமுகவை பொறுத்தவரை காங்கிரஸ் ள்ளிட்ட காட்சிகள் இணைந்துள்ள இந்தியா கூட்டணியில் இருந்து தேர்தலை சந்திக்க இருக்கிறது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த அதிமுக விலகுவதாக அறிவித்திலிருந்து தமிழக அரசியல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்தது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் மெகா கூட்டணி அமைத்து தமிழகத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதேபோல் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்கப்போவதில்லை என்று அறிவித்தார். இப்படி தமிழக அரசியல் கட்சிகள் மாறி மாறி நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வரும் நிலையில் அதிமுகவை சேர்ந்த 50 பேர் திமுகவில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோரணாம்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர் கோபால் உட்பட 50க்கும் மேற்பட்ட எடப்பாடி சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அதிமுகவினர் முன்னாள் அமைச்சர் செல்வகணபதி முன்னிலையில் இன்று திமுகவில் இணைந்துள்ளனர். அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியில் உள்ளவர்களே திமுகவில் இணைந்தது, அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.