தாய்லாந்தில் சிறுநீர் கழிப்பதற்காக காரில் இருந்து இறங்கியது தெரியாமல், மனைவியை நடுரோட்டில் விட்டுவிட்டு கணவர் 160 கி.மீ., பயணித்த சம்பவம் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்தின் மகா சராகாம் மாணகத்தை சேர்ந்த பூன்டோம் சாய்மூன்-அம்னுவாய் தம்பதி. இவர்கள் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டனர். இந்தநிலையில், அதிகாலை 3 மணியளவில் சாலையில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது, கணவர் கழிக்க வேண்டும் என வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கியுள்ளார். அப்போது, அவரின் மனைவிக்கும் சிறுநீர் கழிக்க வேண்டும் என உணர்வு எழுந்துள்ளது. எனவே, அவரும் காரை விட்டு இறங்கியுள்ளார்.
சாலையின் ஓரத்திலேயே கணவர் சிறுநீர் கழிக்க, மனைவியோ அருகில் இருந்த மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதி பக்கம் சென்றுள்ளார். இதையடுத்து, மனைவி வாகனத்தில் இருந்து கீழே இறங்கியது தெரியாமல், சிறுநீர் கழித்துவிட்டு வந்த கணவர் வாகனத்தை எடுத்துள்ளார். அவர் மனைவி இல்லாததை கவனிக்காமல் சுமார் 160 கி.மீ., தூரத்திற்கு பயணித்துள்ளார். நீண்டநேரம் அமைதியாக இருந்ததால், மனைவி பின்சீட்டில் நிம்மதியாக தூங்கிவிட்டார் என நினைத்துள்ளார்.
மறுபுறம், மனைவியோ காட்டுப்பகுதியில் இருந்து சாலைக்கு வந்தபோது, காரும், கணவரும் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். மனைவியின் மொபைல் போனும் காரின் உள்ளேயே இருந்துள்ளதால், அவரால் கணவரை அழைக்க இயலவில்லை. சாலையில் ஆட்நடமாட்டம் குறைவகா இருந்ததால், பயத்தில் தொடர்ந்து நடக்க தொடங்கியுள்ளார். இதையடுத்து, சுமார் 20 கி.மீ., தூரம் நடந்தே சென்றபோது, அதிகாலை 5 மணியளவில் அங்கு உள்ளூர் காவல் நிலையத்தை பார்த்துள்ளார். அவரின் கணவரின் மொபைல் நம்பர் நினைவில் இல்லாததால், தனது மொபைலுக்கு சுமார் 20 முறைக்கும் மேல் அழைத்துள்ளார். ஆனால், அவரின் கணவர் மொபைல் போனை எடுக்கவில்லை. சுமார் 8 மணியளவில், கணவரை காவல் துறையினர் தொடர்புகொண்டனர். சுமார் 150 கி.மீ., தூரத்தை தாண்டிய பின், மீண்டும் வண்டியை திருப்பி சென்றுள்ளார். காவல் நிலையம் வந்த கணவர், அவரின் மனைவியிடம் தொடர்ந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.