தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதாகவும், இந்த மசோதாக்களை நிலுவையில் வைக்காமல் திருப்பி அனுப்பவும் இல்லை என்றும் இது அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாகவும் உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு ரிட் மனுவை தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து, தமிழ்நாடு அரசு மற்றொரு ரிட் மனுவையும் கோர்டில் தாக்கல் செய்தது.
அதில், தமிழக பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் நியமனங்களில் யு.ஜி.சி. தலைவரையும் சேர்க்க ஆளுநர் வலியுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் அரசுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது. அதன்படி, இனி துணை வேந்தர்களை தமிழ்நாடு அரசே நியமிக்க முடியும். இதற்கிடையே, கவர்னர் தலைமையில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை சுட்டிக்காட்டி துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்த கவர்னருக்கு அதிகாரம் இல்லை என எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.
இந்த சூழலில் தான், கவர்னர் மாளிகை இது தொடர்பாக விளக்கமளித்துள்ளது. அதாவது, பல்கலைக்கழகங்களில் பட்டமளிப்பு விழா, துணைவேந்தர்கள் மாநாடு நடத்த ஆளுநருக்கு அதிகாரம் இருப்பதாகவும், கடந்த 3 ஆண்டுகளாக உதகையில் துணை வேந்தர்கள் மாநாடு நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டுமே தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதோடு, ஊட்டியில் வரும் 25, 26ஆம் தேதிகளில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெறுவதாகவும், பல்கலைக்கழகங்களின் வேந்தராக கவர்னரே தொடர்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.