சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இந்தியா, 200 ரன்களை துரத்தியபோது, முதல் 2 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து நெருக்கடியில் சிக்கியது. இந்நேரத்தில் விராட் கோலி உடன் இணைந்து 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததோடு, இறுதிவரை களத்தில் நின்று 115 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்து இந்தியாவுக்கு வெற்றியையும் தேடி தந்து அசத்தினார் கே.எல்.ராகுல்.
விராட் கோலி – கே.எல்.ராகுலின் அபார ஆட்டத்தால் இந்தியா ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக போட்டியில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் காய்ச்சல் காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் விளையாடவில்லை. இந்நிலையில், இந்திய அணி தனது அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுடன் வரும் 11ஆம் தேதி மோதுகிறது.
டெல்லியில் நடைபெறும் இந்த போட்டிக்காக இந்திய அணியினர் இன்று சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றனர். இவர்களுடன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் புறப்பட்டு செல்லவில்லை. அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் சென்னையிலே உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அடுத்த போட்டியிலும் அவர் விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.