முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்கு, கேரள மாநில அரசு தடை விதித்துள்ளது.
கேரளாவில் கடந்த இரண்டு வாரங்களிலேயே 24 பேர் ஃபுட் பாய்சனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாப்பிட்ட உணவுகளில், மயோனைஸ் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எண்ணெய், முட்டையின் மஞ்சள் கரு, எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்து தயாரிக்கப்படும் மயோனைஸ், தந்தூரி சிக்கன், சாண்ட்விச், சாலட், ஃப்ரென்ச் ஃப்ரைஸுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. உணவுப் பொருள் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் பச்சை முட்டையின் வெள்ளைக்கரு கெட்டுப்போனால், அது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா கிருமிகளை உற்பத்தி செய்யத் தொடங்கும். இதுதவிர, சால்மோனெல்லா பாக்டீரியா பெரும்பாலும் சமைக்கப்படாத முட்டைகளில் காணப்படுகிறது.

கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, கோட்டயம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் ஒருவர் சிக்கன் உணவைச் சாப்பிட்டு உயிரிழந்தார். அந்த உணவு மயோனைஸுடன் சேர்த்துக் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் பத்தனம்திட்டா பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள் பலர் ஷவர்மா சாப்பிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த உணவிலும் மயோனைஸ் கலந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேரள அரசின் சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், ”மயோனைஸ் கலந்த உணவை உண்டு பலரும் பாதிக்கப்படுவதால், ஹோட்டல் மற்றும் உணவு விற்பனையகங்களில் முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸ் விற்பனைக்குத் தடை விதிக்கப்படுகிறது. அனைத்து உணவு நிறுவனங்களிலும் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளால் வழக்கமான சோதனைகள் நடத்தப்படும். இதனைக் கண்காணிக்கவும், நுகர்வோர் புகார்களை ஆராயவும் ஒரு பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது” என்றார்.