நான் முதல்வன் திட்டத்தின் கீழ் இரயில்வே, வங்கி, எஸ்எஸ்சி ஆகிய அரசு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இந்த பயிற்சிக்கு விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ள தேர்வர்கள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் மாபெரும் திறன் மேம்பாட்டிற்கான ”நான் முதல்வன்” திட்டத்தின் கீழ், கடந்த மார்ச் மாதம் ‘போட்டித் தேர்வு பிரிவு” தொடங்கப்பட்டது. தமிழக இளைஞர்கள் மத்திய அரசுப் போட்டிகளை எளிதாக அணுகுவதற்கு ஏதுவாக, சிறந்த திறன் பயிற்சி வழங்குவதை குறிக்கோளாகக் கொண்டு இந்த பிரிவு தொடங்கப்பட்டது. இதன் மூலம் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையங்களான (SSC), இரயில்வே பணியாளர் தேர்வுகள் (RRB), வங்கித் தேர்வுகள் (Banking), இந்திய குடிமைப் பணித் தேர்வுகள் (UPSC) போன்ற பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், மாணவர்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் முதற்கட்டமாக இரயில்வே, SSC, வங்கித் தேர்வுகளுக்கான ஒருங்கிணைந்த பயிற்சி, மாவட்டந்தோறும் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் அனைத்து மாவட்டங்களிலும், மாவட்டத்திற்கு தலா 150 மாணவர்கள் வீதம் நேரடி வகுப்பறைப் பயிற்சி சிறந்த வல்லுநர்களைக் கொண்டு வழங்கப்படும். மாணவர்களுக்கான பயிற்சி மற்றும் அச்சிடப்பட்ட புத்தகங்களுக்கான செலவீனங்களை “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் அரசே ஏற்றுக்கொள்ளும். இப்பயிற்சியின் அங்கமாக 300 மணிநேர தனி வழிகாட்டல், 100-க்கும் மேற்பட்ட மாதிரித் தேர்வுகள் ஆகியவை 100 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
மாவட்டந்தோறும் நடைபெறவிருக்கும் இப்பயிற்சிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 20.05.2023 ஆகும். மேலும், பயிற்சி வகுப்புகள் 25.05.2023 அன்று தொடங்குகிறது. எனவே, ஆர்வமுள்ள தேர்வர்கள் இந்த இலவச பயிற்சியில் கலந்து கொண்டு பயன்பெருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இந்த பயிற்சிக்கு Nan Mudhalvan Integrated Course என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு https://www.naanmudhalvan.tn.gov.in/ என்ற இணையதளத்தை அணுகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.