மதுரை விமான நிலையத்தில் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொண்டதாக மத்திய தொழிற்பாதுகாப்பு படை அதிகாரிகள் மீது நடிகர் சித்தார்த் நேற்று குற்றம் சாட்டியிருந்தார். இந்த நிலையில், விமான நிலையத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து மதுரை விமான நிலையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் சித்தார்த் சென்னை செல்வதற்காக தனது தாய் தந்தையருடன் மதுரை விமான நிலையம் வந்ததாகவும், மாலை 4.15 மணியளவில் சி.ஐ.எஸ்.எப் பாதுகாப்பு படையின் சோதனை மையத்திற்கு வந்த அவரிடம் முகக்கவசத்தை அகற்றிவிட்டு அடையாள அட்டையை காட்டுமாறும் கேட்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இது வழக்கமான பாதுகாப்பு நடைமுறைதான். என தெரிவித்துள்ள அதிகாரி, சித்தார்த் குடும்பத்தினரின் உடமைகளும் பரிசோதனை செய்யப்பட்டதாகவும், சோதனை நடந்த போது தமிழகத்தை சேர்ந்த பெண் வீரர்தான் பணியில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த பெண் வீரர் இந்தியில் பேசவில்லை எனவும், மாறாக குடும்பத்தினரின் உடமைகளை அடிக்கடி சோதனை செய்ததாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதற்குதான் சித்தார்த்தும் அவரது குடும்பத்தினரும் கோபம் அடைந்ததாக தெரிவித்துள்ள மூத்த அதிகாரி, ஏன் அடிக்கடி சோதனை நடக்கிறது என்பது குறித்து தெலுங்கு பேசும் அதிகாரி ஒருவர் மூலம் விளக்கம் அளித்ததாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் நடிகர் சித்தார்த் கோபத்துடன் விமானம் ஏறும் இடத்திற்கு சென்றுவிட்டதாக விளக்கம் அளித்துள்ளார். சித்தார்த் கூறியபடி மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் யாரும் இந்தியில் பேசி கடுமையாக நடந்து கொள்ளவில்லை எனவும் சித்தார்த் வைத்த குற்றச்சாட்டுக்கள் தவறானது விமான நிலையம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.