தமிழ்நாட்டை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி வைத்தால், வெல்லவே முடியாது என அதிமுக நினைத்து வைத்திருந்தது. ஆனால், 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தேர்தலை சந்தித்தது. அதே சமயம், 2024இல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி முறிந்த நிலையில், இரு கட்சிகளும் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. இதற்கிடையே, அதிமுகவையும், பாஜகவையும் எப்படியாவது ஒன்றிணைத்துவிட வேண்டுமென டெல்லி பாஜக தீவிரம் காட்டி வந்தது. ஆனால், பாஜகவுடன் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, ”அடுத்த இரண்டு தினங்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வரவுள்ளார். அவரது வருகைக்கு பின் பல அதிரடி மாற்றங்கள் நிகழும்” என தெரிவித்தார். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”திமுகவை வீழ்த்த அதிமுக தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், எங்களுக்கு ஒரே எதிரி திமுகதான் என்றும் மற்ற எந்த கட்சியும் எங்களுக்கு எதிரி கிடையாது என்றும் கூறினார். மக்கள் விரோத திமுக ஆட்சியை வீழ்த்துவதுதான் அதிமுகவின் தலையாய கடமை என்றும் தெரிவித்துள்ளார். அதுதான் 2026இல் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் நடக்கும் என திட்டவட்டமாக கூறியிருக்கிறார். திமுகவை வீழ்த்துவது மட்டுமே ஒரே குறிக்கோள் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது மீண்டும் அதிமுக – பாஜக இணைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும், அமித்ஷா வருகையின்போது, கூட்டணி தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் அல்லது சந்திப்புகள் நிகழலாம் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருக்கும் நிலையில், அதிமுகவும் இணைந்தால், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை வீழ்த்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். இதனால், அரசியல் களம் இப்போதே பரபரக்க தொடங்கிவிட்டது.