மழை காலத்திற்குள்ளாக சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 70 முதல் 80 சதவீதம் நிறைவு பெறும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி பள்ளியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாநகராட்சி நிதியில் இருந்து ஊக்கத் தொகையானது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 12 கல்வி ஆண்டுகளாக வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகைக்கு, இந்த ஆண்டு மட்டும் தகுதியுடைய 425 மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்பட்டு சென்னை மாநகராட்சி சார்பில் 90.50 லட்சம் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் கடந்த 12 கல்வி ஆண்டுகளாக 7,254 மாணவர்களுக்கு 16.44 கோடி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் பயின்று உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கும் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, ”மழை காலத்திற்குள்ளாக சென்னையில் மழை நீர் வடிகால் பணிகள் 70 முதல் 80 சதவீதம் நிறைவு பெறும் என்றார். தற்போது வரை சராசரியாக 50 சதவீதம் மட்டுமே மழை நீர் வடிகால் பணி நிறைவு பெற்றுள்ளதாக தெரிவித்தார். அம்மா உணவகம் மூலம் காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வழங்குவது தொடர்பான முடிவு ஆய்வில் உள்ளதாக தெரிவித்தார். இந்த ஆலோசனையில் முதலமைச்சர் என்ன உத்தரவு பிறப்பிக்கிறாரோ அதன் பேரில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.