திருவண்ணாமலையில் அடித்து செல்லப்பட்ட புதிய பாலம் குறித்த கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்துள்ளார்.
பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் ஏ.வ.வேலு, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் துறை சார்ந்த அதிகாரிகளுடன் மதுரையில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். முன்னதாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஏ.வ.வேலு, ”தமிழ்நாட்டில் பெரும் மழை பெய்த காரணத்தால், கலைஞர் நூற்றாண்டு நூலகம் முறையாக பராமரிக்கப்படுகிறதா? என நூலகத்தை நேரில் ஆய்வு செய்தேன்.
கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் 3 தளங்கள் கொண்ட கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை கோரிப்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 டிசம்பருக்குள் முடிவடையும். தற்போது 25 சதவிகித பாலப்பணிகள் முடிவடைந்துள்ளது. மதுரை மேலமடை உயர்மட்ட மேம்பாலப் பணிகள் 2025 அக்டோபர் மாதத்திற்குள் முடிவடையும்.
ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலத்திற்கும் சாலையில் கட்டப்படும் மேம்பாலத்திற்கும் வித்தியாசங்கள் உண்டு. தண்ணீர் திறந்து விடுவதை கணக்கில் கொண்டு ஆற்றுக்குள் மேம்பாலங்கள் கட்டப்படுகிறது, ஆற்றுக்குள் கட்டப்படும் மேம்பாலங்கள் அதிக அளவில் நீர் வருவதால் சேதமடைகிறது. ஆற்றுக்குள் அடித்துச் செல்லப்பட்ட பாலம் தரம் இல்லாமல் கட்டப்படவில்லை. எதிர்பாராத விதமாக இதுபோன்ற ஆற்றுப் பாலங்கள் நீரில் அடித்துச் செல்லப்படும். திருவண்ணாமலையில் அடித்து செல்லப்பட்ட புதிய பாலம் குறித்த கேள்விக்கு அமைச்சர் எ.வ.வேலு இவ்வாறு விளக்கம் அளித்தார்.