சீனாவில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு வரும் ஜூன் மாத இறுதியில் உச்சத்தை தொடும் எனவும், ஒரே வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவ குழு எச்சரித்துள்ளது.
கொரோனா காரணமாக சீனாவில் மிகவும் நெருக்கடியான நிலை உருவாகி வருகிறது. இதுகுறித்த தகவல்களை தொடர்ந்து சீனா மறைத்து வருவதாக சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், தனது ஜீரோ கோவிட் கொள்கையை கைவிட்டதில் இருந்து கொரோனா தொற்றால், பாதிக்கப்பட்டு பல ஆயிரம் பேர் மருத்துவமனையில் இறந்துள்ளதாக சீன சுகாதார ஆணையத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒமைக்ரான் வகை கொரோனாவின் திரிபான எக்ஸ்.பி.பி. வைரஸ் பரவலால், சீனாவில் ஏப்ரல் மாதத்தில் இருந்தே தொற்று பாதிப்பு சற்று உயரத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மே மாத இறுதியில் ஒரு வாரத்திற்கு 4 கோடி பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சீனா மருத்துவர்கள் குழு தெரிவித்தது. கடுமையான கட்டுப்பாடுகள் பற்றிய யோசனையை சீன அதிகாரிகள் விரும்பவில்லை எனவும், பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிப்பதில் தற்போது சீனா அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் அண்மையில் செய்திகள் வெளியானது.
இதனைத் தொடர்ந்து, வரும் ஜூன் மாத இறுதியில் இந்த கொரோனா அலை உச்சத்தை தொடும் எனவும், ஒரே வாரத்தில் 6.5 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர் குழு எச்சரித்துள்ளது. சீனாவில் கொரோனா பரவத் தொடங்கிய பிறகு ஏற்படும் மிகப்பெரும் அலையாக இது இருக்கும் எனவும் கூறப்படுகிறது. சீனா பல காலமாக ஜீரோ கோவிட் என்ற கொள்கையைப் பின்பற்றி வந்தது. அதாவது யாரேனும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலேயே அந்த இடம் முழுக்க ஊரடங்கு அமல்படுத்தப்படும். இதற்கு எதிர்ப்பு அதிகரித்த நிலையில், கடந்தாண்டு சீனா இதைக் கைவிட்டது. அப்போது முதலே வைரஸ் பாதிப்பு அங்கே திடீர் திடீரென அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது.