தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், மின் கட்டணம் உயர்த்தப்படாது என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி வழங்குமாறு, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் வாரியம் விண்ணப்பித்தது. இதனையடுத்து மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. அதன்பிறகு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் திட்டமிட்டுள்ளதாகக் தகவல் வெளியானது. அடுத்த மாதம் (ஜூலை) முதல் மின் கட்டணத்தை உயர்த்த மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. மின் கட்டணத்தை உயர்த்தி 10 மாதங்கள் கூட முடியாத நிலையில் மீண்டும் கட்டணத்தை உயர்த்தப்போவதாக தகவல் வெளியானதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பொதுமக்களும், அரசியல் தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் அடுத்த மாதம் தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதனால் பொதுமக்கள் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.