கனியாமூரில் கலவரத்துக்குள்ளான பள்ளியை அரசே ஏற்று நடத்தக் கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்தை தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் பெரும் கலவரம் ஏற்பட்டது. பள்ளி கட்டிடம், பொருட்கள், வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. மாணவி மரணம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரும், கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழுவும் தனித்தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றன. இந்நிலையில், பள்ளி மீண்டும் செயல்பட அரசு அனுமதித்துள்ளதாகவும், இது மாணவர்கள்-பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் பள்ளியை அரசு ஏற்று நடத்த உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பள்ளி விடுதிக்கு அங்கீகாரம் பெறாததால் பள்ளியை அரசு ஏற்று நடத்தக் கோரி செப்டம்பர் 14ஆம் தேதி மனு அளித்தும் அது பரிசீலிக்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சிறப்பு அதிகாரியை நியமித்து
பள்ளியை அரசு தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வு, ”தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஒவ்வொரு பள்ளியிலும், ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் உள்ளதாகவும், அதற்காக அரசு ஏற்க வேண்டும் என கோர முடியுமா? அரசே ஏற்க வேண்டும் என்றால் நிலம், கட்டிடங்களுக்கு விலை கொடுக்க வேண்டும், ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டும் என்பன போன்ற விஷயங்கள் இருக்கிறது தெரியுமா? என மனுதாரருக்கு கேள்வி எழுப்பினார். பின்னர் மனுவில் எந்த தகுதியும் இல்லை எனவும், நியாயமான காரணம் ஏதும் இல்லை எனவும் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.