“தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு வந்தால் அதனை நாங்களே தெரிவிப்போம்” என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”15 இடங்களில் 30 வயதை கடந்த மகளிருக்கு ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையில் உள்ள புற்றுநோய் கண்டறியும் வகையில் இந்த முகாம் நடைபெற இருக்கிறது. காஞ்சிபுரத்தில் அண்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையம் ஒன்று அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஓராண்டில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் தொடங்கப்படும்.

தமிழ்நாட்டில் தற்போது வரை குரங்கம்மை பாதிப்பு இல்லை. அப்படி குரங்கம்மை பாதிப்பு வந்தால் அதனை நாங்களே தெரிவிக்கிறோம். குரங்கம்மை பாதிப்பு இல்லவே இல்லை என்று நாங்கள் கூறவில்லை. பன்னாட்டு விமான நிலையம் உள்ள மாநிலங்களான சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு மருத்துவமனையிலும் 10 படுக்கைகளுடன் மையம் அமைக்கப்பட்டுள்ளது. குரங்கம்மை பாதிப்பு நேரிட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் மருத்துவர்கள் தயார் நிலையில் உள்ளனர். ஆசாரி பள்ளம் மற்றும் திருச்சி இரண்டு இடத்திலும் குரங்கம்மை பாதிப்பு இருப்பதாக தவறான வதந்திகள் பரவுகிறது. இதனை யாரும் நம்ப வேண்டாம். நிச்சயமாக குரங்கம்மை பாதிப்பு நடவடிக்கையில் அரசு வெளிப்படையாக இருக்கும். ஊடகங்கள் இதனை பெரிதுபடுத்த வேண்டாம்”. இவ்வாறு அவர் கூறினார்.