மிக்ஜாம் புயல் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களை புரட்டிப் போட்டது. இந்த பாதிப்பு காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கையில இருந்து இன்னும் மீள முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் ஒரு புயல் சென்னையை நோக்கி வருவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது. ஆனால், இந்த தகவலை தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் மறுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ”சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சிறிய அளவில் தான் மழை பெய்யும். சாதாரண மழைக்கே மக்கள் பீதி அடையும் நிலை உள்ளது. இது மக்களை உளவியல் ரீதியாக பாதிக்கப்பட செய்யலாம். இந்நிலையில் அடுத்த 2 வாரங்களில் சென்னையைத் தாக்க எந்தப் புயலும் வராது.
அடுத்ததாக 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதனை இன்னும் உறுதிப்படுத்த இன்னும் அதிக நாட்கள் உள்ளது. எனவே, இப்போதைய நிலையில் நிவாரணப் பணிகள் தான் முக்கியம். அதே நேரத்தில் அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தின் பிற பகுதிகளில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம் போன்ற மேற்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்றும் திருச்சி பெரம்பலூர், கரூர், டெல்டா போன்ற உள்பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர், தேனி, தென்காசி, குன்னூர், ஈரோடு பகுதியில் மழை பெய்யும் என்றும் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு ஜனவரி மாதம் வரை நீடிக்கும்” எனவும் தெரிவித்துள்ளார்.