Water cans: குழாய் நீரில் காணப்படும் அசுத்தங்களை விட ஆர்ஓ நீரைக் குடிப்பது அதிகமான உடல் தீங்கை உண்டாக்கும் என அறிவியல் பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வீடுகளிலும் தண்ணீரை சுத்திகரிக்க ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ் (ஆர்ஓ) அமைப்புகள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆர்ஓ சிஸ்டம் தண்ணீர் அசுத்தங்களை நீக்குகிறது என்பது உண்மைதான் என்றாலும் அதோடு சேர்ந்து நன்மை பயக்கும் கால்சியம் மற்றும் மெக்னீசியத்தையும் 92-99% நீக்குகின்றன. இருப்பினும், அப்படி RO நீரை உட்கொள்வதால் இருதயக் கோளாறுகள், சோர்வு, உடல் பலவீனம் , தசைப்பிடிப்பு, கால்சியம் குறைபாடு ஆகிய பக்கவிளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பல்வேறு ஆய்வுகளும் உறுதிப்படுத்தியுள்ளன.
அதாவது, சென்னையில் ஒவ்வொரு நாளும் சுமார் 1100 மில்லியன் லிட்டர் தண்ணீர் ‘சென்னைப் பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியத்தால்'(CMWSSB) விநியோகிக்கப்படுகிறது. செம்பரம்பாக்கம், செங்குன்றம், புழல் போன்ற ஏரிகள் நீராதாரமாகவும், நிலத்தடி நீரை பொறுத்தவரை தாமரைப்பாக்கம், மீஞ்சூர் போன்ற பகுதிகளில் உள்ள குழாய்க்கிணறுகளும், கடல் நீரை பொறுத்தவரை நெம்மேலி, மீஞ்சூர் பகுதிகளில் உள்ள கடல்நீர் சுத்திகரிப்பு நிலையங்களும் நீராதாரமாக இருக்கின்றன.
ஆனால் தனியார் குடிநீர் விற்பனையாளர்கள் பெரும்பாலும் நிலத்தடி நீரைத்தான் நம்பியிருக்கின்றனர். ஆழ்த்துளை கிணறுகளை அமைத்து அதன் மூலம் நீரை உறிஞ்சி எடுத்து அதை தூய்மைப்படுத்தி கேன்களில் அடைத்து விற்பனை செய்கின்றனர். இந்த RO, UV (Ultraviolet), மற்றும் ஓசோன் சுத்திகரிப்பு மூலம் நிலத்தடி நீர் தூய்மைப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இதில் கனிம உப்புகள் குறைவாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.
கேன் வாட்டரில் பிளாஸ்டிக் நுண் துகள்கள் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது என உலக சுகாதார மையம் எச்சரித்திருக்கிறது. இந்த துகள்கள் உடலில் நுழைந்தால் கேன்சர் போன்ற மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்தநிலையில், தண்ணீர் கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்த கூடாது என்றும், கீறல் விழுந்த, அழுக்கடைந்த கேன்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம் எனவும் உணவு பாதுகாப்புத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் நேற்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான உணர்திறன் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பேசிய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார், கேன்களை 50 முறைகளுக்கு மேல் பயன்படுத்த கூடாது, கீறல் விழுந்த அழுக்கடைந்த கேன்களை பயன்படுத்த வேண்டாம், நேரடி சூரிய ஒளியில் வைக்கப்பட்டிருக்கும் கேன்களில் உள்ள குடிநீரை பயன்படுத்த கூடாது, குடிநீர் தரத்தை உறுதி செய்வது அவசியம் என்று அறிவுறுத்தியுள்ளார். அடுத்து வரும் வாரங்களில் சென்னை மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் செயல்படும் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில் அடுத்தடுத்து சோதனை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.