இந்தியாவிற்கும், ஆன்மீகத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்தியாவில் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களைக் காட்டிலும் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களே அதிகம் உள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை. எந்த மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தான் சார்ந்த மதத்தின் கடவுளை நம்புகிறவர்கள் இந்தியாவில் பரவலாக உள்ளனர். எண்ணிக்கையை பொறுத்த வரையில் இந்தியாவில் இந்து மக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும். அதனால் இந்தியாவில் கோயில்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ளது. இந்து மதத்தில் எண்ணற்ற கடவுள்கள் வழிபடபடுகின்றனர். இதில் விசித்திரமானது என்னவெனில் இந்து மதத்தில் கடவுள்களுக்கு மட்டும் கோயில் இல்லை, இதிகாசத்தில் இருக்கும் எதிரிகளுக்கும் கோயில்கள் உள்ளது.
அந்தவகையில், மஹாபாரதத்தில் வரும் முக்கியமான நபர்களில் ஒருவர் காந்தாரி. திருதராஷ்டிரனின் மனைவியாக வாழ்நாள் முழுவதும் கண்ணைக் கட்டிக்கொண்ட வாழ்ந்த காந்தாரி சிறந்த மனைவிக்கு உதாரணமாக இன்றளவும் அனைவராலும் குறிப்பிடப்படுகிறார். கௌரவர்களின் தாயான இவரின் சாபம்தான் கிருஷ்ணரின் மரணத்திற்க்கு காரணமாக இருந்தது என்று கூறப்படுகிறது. காந்தாரிக்கு என்று கர்நாடகாவில் இருக்கும் மைசூரில் பிரம்மாண்டமாக ஒரு கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் 2008ம் ஆண்டு கட்டப்பட்டது.
இதேபோல், மகாபாரதத்தில் அனைவரின் மரியாதைக்கும், விருப்பத்திற்கும் உரிய ஒரு நபர் என்றால் அது கர்ணன்தான். இன்றுவரை நட்புக்கு இலக்கணமாக இருப்பது கர்ணன்தான். அனைத்து தகுதிகளும் இருந்தும் இறுதிவரை தனது திறமைக்கான அங்கீகாரம் கிடைக்காமல் போன கர்ணன் வில்லாற்றலில் அர்ஜுனனை விட சிறந்தவராக இருந்தார் என்பதே உண்மை. கர்ணனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் உத்ரகாண்டின் தேவ்ராவில் அமைந்துள்ளது. இங்கு வேண்டிக்கொள்வது விரைவில் நிறைவேறுவதால் ஏராளமானோர் இந்த கோயிலுக்கு வருகைப் புரிகின்றனர். கர்ணன் சிறந்த தனுர் வீரராக இருந்தாலும் போரில் அவர் அதர்மத்தின் புறத்தில் இருந்ததால் அவர் மீது புகழ் வெளிச்சம் முழுமையாக விழவில்லை.
இதிகாச வில்லன்கள் என்றாலே அனைவரின் நினைவிலும் முதலில் தோன்றுவது அசுர வேந்தன் இராவணன்தான். இராவணனுக்காக கட்டப்பட்ட கோயில் ஆந்திராவின் காக்கிநாடாவில் உள்ளது. இந்த கோயிலுக்கு வருபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். இந்தியாவில் இராவணனுக்கு பல கோயில்கள் இருந்தாலும் இந்த கோயில் பல சிறப்புகளை உடையது. பல தேவ பிராமணர்கள் இராவணனை தங்களின் மூதாதையராக நினைத்துக் கொண்டிருக்கினறனர்.
மகாபாரதத்தின் மிகப்பெரிய வில்லன் துரியோதனன்தான். மிகவும் கொடூரனாக சித்தரிக்கப்படும் துரியோதனனுக்குக் கூட இந்தியாவில் கோயில் உள்ளது. இந்த கோயிலின் பெயர் ” மலனாடா ” என்பதாகும், இந்த கோயில் கேரளாவில் இருக்கும் கொல்லத்தில் உள்ளது. இந்த கோவிலில் சிவப்புத்துணியும், வெற்றிலையும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மகாபாரதத்தின் உண்மையான வில்லன் என்றால் அது சகுனிதான். சகுனிக்கும் இந்தியாவில் கோயில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோயில் துரியோதனின் கோவிலுக்கு மிக அருகில் உள்ளது. சகுனி மிகவும் எதிர்மறையான நபராகக் கருதப்பட்டாலும், சனாதன தர்மத்தின் படி சகுனியிடமும் சில நல்ல விஷயங்களைக் கொண்டிருந்தார்.