இந்திய மக்களை இன்று இண்டர்நெட், போன் இணைத்தாலும், பல ஆண்டு காலமாக இந்திய மக்களை பல வழிகளில் இணைத்தது தபால் அலுவலகம் தான், தந்தி வந்தாலே வீட்டில் இருப்போர் அலறிய காலம் உண்டு. இன்று யூபிஐ மூலம் பணம் அனுப்பினாலும், அன்று தீபாவளிக்கும், பொங்கலுக்கும் உறவினர் அனுப்பும் எதிர்பாரா மனி ஆர்டர் கொடுத்த மகிழ்ச்சி விவரிக்க முடியாது. இப்படிப்பட்ட தபால் நிலையம் நாட்டு மக்களுக்கு தற்போது முக்கிய முதலீடு, நிதி சேவைகள் அளிக்கும் அமைப்பாக மாறியுள்ளது. இந்திய தபால் நிலையத்தில் மிகவும் குறைந்த முதலீட்டில் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டு திட்டத்தை அளிக்கிறது.
பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் – இந்திய தபால் நிலையத்தில் வழங்கப்படும் குழந்தைகளுக்கான ஆயுள் காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், பெற்றோர்கள் ஒரு தபால் நிலைய கணக்கில் ஒரு நாளைக்கு 6 ரூபாய் மட்டுமே டெபாசிட் செய்து இத்திட்டத்தின் பலன்களை பெறலாம். பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் என்பது ஆயுள் காப்பீடு என்பதால் குழந்தைக்கு எதிர்பாராதவிதமாக அல்லது துரதிர்ஷ்டவசமாக இறந்து போனால், ரூ.1 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீட்டு தொகை கிடைக்கும். இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சமே குறைவான முதலீட்டு தொகை கொடுத்தது தான், அடித்தட்டு மக்களுக்கும் ஆயுட்கால காப்பீட்டு பலன்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக மிகவும் குறைந்த அளவிலான தினசரி வைப்புத் தொகை இருப்பதால் ஒரு குடும்பத்திற்கு நிதிச் சுமை குறைவாக இருக்கும்.
இத்திட்டத்தில் மூலம் ரூ. 1 லட்சம் ஆயுள் காப்பீட்டுத் தொகை குழந்தையின் 18 வயது வரையில் கிடைக்கும். 20 வயதுக்கு பின்பு குழந்தையின் உயிருக்கு எவ்விதமான பாதிப்பு இல்லாமல் இருந்தால் முதலீடு செய்யப்பட்ட தொகைக்கு கிராம் சந்தோஷ் திட்டத்தின் வட்டி பலன்கள் உடன் முதிர்வு தொகை கிடைக்கும். தற்போது கிராம் சந்தோஷ் திட்டத்தின் போனஸ் தொகை 1000 ரூபாய்க்கு 48 ரூபாய். 20 வயதுக்கு பின்பு பெரும் தொகை குழந்தையின் கல்வி அல்லது பிற நிதிப் பொறுப்புகள் தொடர்பான செலவுகளை ஈடுசெய்ய உதவும். ஒருபக்கம் ஆயுள் காப்பீடும், மற்றொரு பக்கம் முதலீட்டு பலன்களையும் அளிக்கிறது. ஒரு பெற்றோர்-க்கு அதிகப்படியாக 2 குழந்தைக்கு மட்டுமே பால் ஜீவன் பீமா யோஜனா திட்டம் வழங்கப்படுகிறது. 8 முதல் 20 வயதுடைய குழந்தைகளுக்கு இத்திட்டத்தின் கீழ் தபால் நிலையத்தில் பெற்றோர்கள் சென்று விண்ணப்பத்தை சமர்ப்பித்து இத்திட்டத்தை பெறலாம். Bal Jeevan Bima திட்டத்தில் அதிகப்படியான ஆயுள் காப்பீடு தொகை 1 லட்சம் மட்டுமே என்பதை மறக்க வேண்டாம். உதாரணமாக 10 வயது குழந்தைக்கு தினமும் 6 ரூபாய் முதலீட்டில் 5 வருட முதலீட்டில் 1 லட்சம் ரூபாய் வரையிலான இன்சூரன்ஸ் பாதுகாப்பை பெறலாம். மேலும் தபால் நிலையத்தில் Rural Postal Life Insurance, Postal Life Insurance என்ற இரு திட்டங்கள் தனி தனியாக வழங்கப்படுகிறது. மேலே குறிப்பிட்ட திட்ட விபரங்கள் Rural Postal Life Insurance திட்டத்திற்கானது. Postal Life Insurance கீழ் இருக்கும் Bal Jeevan Bima திட்டத்தில் 3 லட்சம் வரையிலான இன்சூரன்ஸ் பாதுகாப்பு கிடைக்கிறது.