அண்மை காலமாக சைபர் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வங்கிக் கணக்கு, ஆதார், பான் கார்டு சார்ந்து தான் பல குற்றங்கள் நடந்து வருகின்றன. அதாவது, உங்களுடைய மொபைல் எண்ணிற்கோ, வாட்ஸ் அப் மூலமாகவோ லிங்கை அனுப்பி, தனிப்பட்ட விவரங்களை உள்ளிடுமாறு கூறப்படுகிறது. இந்த வகையான மோசடிகள் ஆபத்துகள் நிறைந்தவை. அதனால் நாம் கவனமுடன் இருக்க வேண்டும். உங்களது முக்கிய தகவல்களை உள்ளிடுவது மூலம் பண மோசடி மற்றும் பிற வகையான மோசடிகளை சந்திக்க நேரிடும்.
அந்தவகையில், சமீப காலமாக ஆதார் அப்டேட் செய்ய வேண்டும் என இ-மெயில் அல்லது வாட்ஸ்அப்பில் லிங்க் அனுப்பி மோசடி நடக்கின்றன. அப்போது, நாம் என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம். உங்களுக்கு ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என இ-மெயில் வருகிறது என்றால் கவனமுடன் இருக்க வேண்டும். இந்த மெயில்கள் ஆபத்தானவை. அந்த லிங்கில் சென்று நீங்கள் அப்டேட் செய்ய முயலும் போது தனிப்பட்ட தகவலை உள்ளிட நேரிடும். இது மோசடிகளாக கூட இருக்கலாம்.
அதற்கு நீங்கள் myaadhaar.uidai.gov.in என்ற அதிகாரப்பூர்வ வெப்சைட்டிற்கு சென்று அப்டேட் செய்து கொள்ளலாம். இல்லையென்றால் அருகில் உள்ள ஆதார் மையத்திற்கு சென்று புதுப்பித்துக் கொள்ளலாம். இந்தியாவின் தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் கார்டை அப்டேட் செய்ய மெயில் மூலமாகவோ, வாட்ஸ் அப் மூலமாகவோ தகவல் அனுப்பாது. மேலும், அடையாளச் சான்று (POI), முகவரிச் சான்று (POA) ஆகியவற்றை பகிருமாறும் கூறுவதில்லை. எனவே, ஆதார் கார்டை அப்டேட் செய்ய வேண்டும் என இ-மெயில் வருகிறது என்றால் அதனை நீங்கள் தவிர்ப்பது நல்லது.