அமெரிக்காவை சேர்ந்த ஒருவர் ஒரே ஆண்டில் 777 திரைப்படங்களை பார்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
கின்னஸ் சாதனை படைப்பவர்களின் பட்டியல் சமீபகாலமாக நீண்டு கொண்டே செல்கிறது. அந்த வகையில், அண்மையில் சினிமா ஆர்வலர் ஒருவரும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த சாக்ஸ்வோப் என்பவர் கடந்த 2022 ஜூலை முதல் 2023 ஜூலை வரையிலான ஒரு ஆண்டில் மட்டும் மொத்தம் 777 திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்.
32 வயதான இவர், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 100 முதல் 150 படங்கள் வரை திரையரங்குகளில் பார்த்துள்ளார். இதற்கு முன்பு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த வின்சென்ட் க்ரோன் என்பவர் 715 படங்கள் பார்த்ததே சாதனையாக இருந்தது. அதனை சாக்ஸ்வோப் தற்போது முறியடித்துள்ளார். அதே போல் சாக்ஸ்வோப் கின்னஸ் சாதனை படைப்பதற்காக ‘மினியன்ஸ்: ரைஸ் ஆப் க்ரு’ படத்தில் தொடங்கி ‘இன்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆப் டெஸ்டினி’ வரை பலதரப்பட்ட படங்களையும் பார்த்துள்ளார்.
இந்த சாதனை படைப்பதற்கென்று சில விதிமுறைகள் இருக்கின்றன. அதாவது படம் பார்க்கும் போது, மது அருந்தியிருக்கக் கூடாது, உணவு உட்கொள்ளக்கூடாது என்பது உள்ளிட்ட விதிமுறைகளை தவறாமல் சாக்ஸ்வோப் பின்பற்றி வந்துள்ளார். இதனை தியேட்டர் ஊழியர்களும் உறுதி செய்துள்ளனர். ஒவ்வொரு வார நாட்களிலும் காலை 6.45 மணி முதல் மதியம் 2.45 வரை வேலைக்கு செல்லும் சாக்ஸ்வோப் அதன்பிறகு தியேட்டருக்கு சென்று படங்கள் பார்த்து வந்துள்ளார்.
வார இறுதி நாட்களில் 3-க்கும் மேற்பட்ட காட்சிகளை பார்த்துள்ளார். இவர் பார்த்த அனைத்து திரைப்படங்களிலும், அதிக முறை பார்த்தது புஸ் இன் பூட்ஸ்: தி லாஸ்ட் விஷ். இந்தப் படத்தை அவர் 47 முறை பார்த்துள்ளாராம். அவருக்கு மிகவும் பிடித்த படம் ஸ்பைடர் மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்-வெர்ஸ் மற்றும் தி டெவில் கான்ஸ்பிரசி ஆகும். ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஸ்வோப் இந்த முயற்சியை மேற்கொண்டதாகவும், அவருக்கு அஸ்பெர்ஜர் எனப்படும் ஒரு வகையான மன இறுக்க நோய் பாதிப்பு இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் அவரது இந்த சாதனையை தானே முறியடிக்க முயற்சி செய்ய வாய்ப்புகள் உள்ளதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.