கேரளாவில் வசித்து வரும் இளம்பெண் ஒருவர், தன்னை ஆட்டோ ஓட்டுநர் பலாத்காரம் செய்து விட்டதாக பொய் புகார் கொடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கொச்சியில் வசித்து வரும் 19 வயது இளம்பெண் நேற்று முன்தினம் தனது ஆண் நண்பருக்கு போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆட்டோவில் கடற்கரைக்கு செல்லும்போது, ஆட்டோ ஓட்டுநர் தன்னை பலாத்காரம் செய்ததாகவும், அவரது ஆட்டோவில் ஏறி பயணிக்கும்போதே தான் மயங்கிவிட்டதாகவும், எழுந்து பார்த்தபோது அரை நிர்வாணமாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண்ணின் நண்பர், உடனடியாக போலீசில் புகார் அளிக்க வற்புறுத்தியுள்ளார். ஆனால், பெண் முதலில் தயங்கியுள்ளார். ஆண் நண்பர் தொடர்ந்து வலியுறுத்தவும்தான் பிறகு புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல்துறையினர் விசாரணை நடத்தி 58 வயது ஆட்டோ ஓட்டுநரை கைது செய்தனர்.
அவரிடம் நடந்த விசாரணையில் அவர் தான் ஒரு அப்பாவி, எந்தத் தவறும் செய்யவில்லை என்று கதற, உடனடியாக பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் இருவரையும் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் ஆட்டோ ஓட்டுநர் நிரபராதி என்பது உறுதியானது. இதையடுத்து, பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்தப் பெண் பொய் புகார் கொடுத்துள்ளதற்கான காரணமும் தெரியவந்தது.
தனது ஆண் நண்பர் தன்னை கைவிட்டுச் செல்லாமல், எப்போதும் தன்னுடன் இருக்க வேண்டும் என்ற ஆசையில் இவ்வாறு பொய் சொன்னதாக தெரிவித்துள்ளார். இதனைக்கேட்டு போலீஸ் அதிகாரிகள் கோபம் அடைந்தாலும், தங்களின் மனக்குமுறலைக் கட்டுப்படுத்திக் கொண்டு பெண்ணைக் கண்டித்து அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.