நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆசிரியர்கள் பதவி உயர்வைப் பறிக்கும் அரசாணை 243-ஐ கைவிட வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்களை சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதி வழியில் அறப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். அப்படி போராட்டத்தை முன்னெடுத்த தொடக்கக்கல்வி ஆசிரியர் பெருமக்களைக் கொடுங்குற்றவாளிகள் போல கைது செய்யும் திமுக அரசுக்கு கண்டனம். திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளைத்தானே ஆசிரியர் பெருமக்கள் நிறைவேற்றக் கோருகிறார்கள்.
ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகியும் அதைக்கூட நிறைவேற்ற முடியாதா? உரிமை கேட்டு அமைதி வழியில் போராடுவது அரசியலமைப்பு வழங்கிய அடிப்படை உரிமையாகும். அதைக்கூட அனுமதிக்க மறுப்பதற்குப் பெயர் தான் திராவிட மாடலா? கருத்துரிமையைக் காலில் போட்டு மிதித்து, போராடும் ஆசிரியர்களை சமூக விரோதி போல கைது செய்வதுதான் சமூகநீதி அரசா? இதுதான் எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாத ஆட்சியா? திமுக அரசு, கைது செய்யப்பட்ட ஆசிரியர் பெருமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் உடனடியாக விடுவித்து, அவர்களது கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்றித் தரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Read More : பெண்களுக்கு பணிச்சுமை குறைவு..!! சிசேரியன் அதிகரிக்க இதுதான் காரணமா..? அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்..!!