மாஸ்கோவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புட்டினில் அலெக்ஸி நவல்னி பிறந்தார். இவர், 1998இல் மக்கள் நட்பு பல்கலைக்கழகத்தில் சட்டப் பட்டம் பெற்றார். ரஷ்யாவின் புடின் ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி பேச தொடங்கிய போது அலெக்ஸி நவல்னிக்கு பிரச்சனைகள் தொடங்கியது. தனது தேசியவாதக் கருத்துக்களுக்காக அரசியல் கட்சிகளில் இருந்து வெளியேற்றப்பட்டார். எனினும் ஊழலுக்கு எதிராக தொடர்ந்து பிரச்சாரம் செய்து வந்த அவர், கிரெம்ளின் எதிர்ப்பு போராட்டங்களை நடத்தினார்.
புடினின் அரசாங்கத்திற்கு எதிரான நவல்னியின் செயல்பாடு பல தடுப்புக் காவல்களுக்கும், வழக்குகளுக்கும் வழிவகுத்தது. ஆனால், அவரின் ஊழல் குற்றச்சாட்டுகளை நிராகரித்த ரஷ்ய அதிபர் மாளிகை, அவர் மேற்கத்திய உளவுத்துறை அமைப்புகளால் கட்டுப்படுத்தப்படும் ஒரு தீவிரவாத கைப்பாவை என்று அவரை கூறியது. சட்டரீதியான சவால்கள் மற்றும் அரசாங்க எதிர்ப்பை எதிர்கொண்ட போதிலும், நவல்னி அரசியல் சீர்திருத்தம் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றில் உறுதியாக இருந்தார்.
அவர் சிறையில் அடைக்கப்பட்டபோதும், பல்வேறு சேனல்கள் மூலம் தொடர்ந்து குரல் எழுப்பினார். ரஷ்யாவில், புடினின் அரசியல் எதிரிகள் சிறைவாசம் பெறுவதும், சந்தேகத்திற்கிடமான விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அல்லது அடக்குமுறைக்குப் பிறகு நாடுகடத்தப்பட்டனர். ஆனால், நவல்னி தொடர்ந்து வலுவடைந்து எதிர்க்கட்சியின் முக்கிய தலைவராக மாறி புடினின் எதிரியாக மாறினார். ஆகஸ்ட் 2020இல் நவல்னியின் படுகொலை முயற்சி உலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஏனென்றால், அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதால் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். பின்னர், ஜெர்மனியில் விரிவான மருத்துவ சிகிச்சையைத் தொடர்ந்து அவர் உடல்நிலை முன்னேறியது. ரஷ்யாவில் அச்சுறுத்தல்கள் தனது செயல்பாட்டைத் தொடர ரஷ்யா திரும்பினார்.
நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது தொடர்பான விசாரணையை ரஷ்யாவின் FSB பாதுகாப்பு அமைப்பு மேற்கொண்டது. இருப்பினும் ரஷ்ய அரசாங்கம் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. தீவிரவாத குற்றச்சாட்டின் பேரில் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நவல்னி, டிசம்பரில் விளாடிமிர் பகுதியில் உள்ள அவரது முன்னாள் சிறையில் இருந்து ஆர்க்டிக் வட்டத்திற்கு மேலே உள்ள ரஷ்யாவின் மிக உயர்ந்த பாதுகாப்பு நிலை சிறைகளுக்கு மாற்றப்பட்டார்.
தற்போது இந்த சிறையில் தான் நவல்னி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. நவல்னிக்கு யூலியா நவல்னயா என்ற மனைவியும், 2 குழந்தைகள் உள்ளனர். இது மரணம் இல்லை கொலை என்று அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஊடகங்கள் குற்றம்சாட்டியுள்ளன. நவல்னியின் மரணம் புடினின் அடக்குமுறை ஆட்சிக்கு எதிராக நிற்பதால் ஏற்படும் ஆபத்துகள் பற்றிய தெளிவான செய்தியை வெளிப்படுத்தவதாகவும் விமர்சித்துள்ளன.