அரசு அலுவலகத்திற்குள் தலைக்கவசம் அணிந்து கொண்டு ஊழியர்கள் பணியாற்றிய காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் பீர்பூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றும் ஊழியர்கள்தான் ஹெல்மெட்டை அணிந்துக் கொண்டு பணிபுரிகின்றனர். தங்கள் உயிருக்கு ஆபத்து ஏதும் ஏற்பட்டு விடக் கூடாது என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்த கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. நல்வாய்ப்பாக இந்த சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
இதனைத் தொடர்ந்து இங்கு பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் நலனுக்காக தலையில் ஹெல்மெட்டை அணிந்து கொண்டு பணியாற்றி வருகின்றனர். இந்த கட்டிடம் வாடகையில் இயங்கி வருகிறது. வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், உயரதிகாரிகளின் அனுமதி கிடைக்காததால் அங்கு அலுவலகத்தை மாற்றம் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
ஹெல்மெட் அணிந்து அரசு ஊழியர்கள் பணியாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அங்கு ஊழியர்கள் மட்டுமல்லாமல் தங்கள் கோரிக்கைக்காக நேரில் வருவதற்கும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சமீபத்தில் ஏற்பட்ட கனமழையாலும் கட்டிடம் கடுமையாக சேதம் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.