நாளுக்கு நாள் போலி பத்திரங்களின் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பத்திரங்கள் யார் பெயரில் உள்ளது என்பதை ஆன்லைனிலேயே அறிந்து கொள்ள முடியும்.
நிலத்தை வாங்கி விற்பதற்கு பத்திரங்கள் மிக முக்கியம். அதனால் தான், போலி பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரங்கள் போலவே உருவாக்கி மோசடிகள் அரங்கேறி வருகிறது. ஆள் மாறாட்டம், போலியான ஆவணங்கள் மூலம் போலி பத்திரப்பதிவுகள் நடைபெறும் பட்சத்தில் அவை கண்டறியப்பட்டால் சார்பதிவாளரோ, பத்திரப் பதிவுத்துறை ஐஜியோ அதனை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தின் உதவியை சம்பந்தப்பட்டவர்கள் நாடலாம்.
அந்தவகையில், போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு மட்டுமே இதுநாள் வரை இருந்தது. ஆனால், அந்த நிலையை மாற்றி, இனி பத்திரப்பதிவு தலைவரே, போலி பத்திரப்பதிவை ரத்து செய்யும் திருத்தச் சட்ட மசோதா, சட்டப்பேரவையில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி, போலி பத்திரம் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக பதிவாளர் கருதினால், அந்த பதிவை பதிவாளரே தானாக முன்வந்தோ அல்லது யாரிடமிருந்து வரப்பெற்ற புகாரின் அடிப்படையிலோ, ஏன் அந்த பத்திரப் பதிவை ரத்து செய்யக்கூடாது? என்பதற்காக காரணத்தை கேட்டு அறிவிப்பை வெளியிட வேண்டும்.
இந்நிலையில், ஒருவரின் பத்திரம் உண்மையா? அது அவர்களின் பெயரில்தான் உள்ளதா? உரிமையாளர் யார்? என்பதை கண்டுபிடிக்க, ஆன்லைனிலேயே வசதியும் உள்ளது. இதற்காக இணையதள முகவரி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. https://ecview.tnreginet.net/ என்ற இணையதளத்திற்கு சென்று, சப்-ரிஜிஸ்டர் அலுவலகம், பத்திரம் நம்பர், பதிவு செய்த ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்தால், பத்திரம் குறித்த உண்மையான தகவல்கள் நமக்கு கிடைத்துவிடும்.
ஒரு நிலத்தை இன்னொருவரிடம் இருந்து வாங்கும்போது அதில் வில்லங்கம் இருக்கிறதா? என்பதை சம்பந்தப்பட்டவர்களே ஆன்லைனில் தெரிந்து கொள்ளும் வசதி உள்ள நிலையில், போலி பத்திரங்கள் யார் பெயரில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே இந்த வசதியை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளது.