நீலகிரி மாவட்டம் உதகை அருகே தேயிலை பறிக்கச் சென்ற பெண் திடீரென மாயமான நிலையில், போலீசார் இதுகுறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், காணாமல்போன போனதாக தேடப்பட்டு வந்த அஞ்சலை என்ற பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உதகை அருகே பேரார் பொம்மன் நகரில் வசித்து வருபவர் கோபால். இவரது மனைவி அஞ்சலை.
இவர், சம்பவத்தன்று தேயிலை பறிக்க காலிபெட்டா என்ற பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து, நேற்றிரவு வரை அஞ்சலையை அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில், ஒரு தனியார் தேயிலை தோட்டத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அஞ்சலையை வன விலங்கு தாக்கிக் கொன்று தேயிலை தோட்டத்திற்குள் இழுத்துச் சென்றதாகவும், கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை சாப்பிட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து உடனடியாக உதகை வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உதகை வடக்கு சரக வனத்துறையினர், காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், அஞ்சலையை சிங்கம், புலி போன்ற வனவிலங்கு தான் தாக்கி இறந்திருக்கக் கூடும் என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.