பொதுவாக சினிமா பிரபலங்கள் பலரும் எப்போதும் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்திருப்பார்கள். இதற்காக கடுமையான டயட், உடற்பயிற்சிகளையும் அவர்கள் செய்வார்கள். அந்த வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் தனது ஃபிட்னஸ் சீக்ரெட் குறித்து பேசி உள்ளார். சமீபத்தில் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு பேட்டி அளித்த அவர், தனது கட்டுக்கோப்பான உடலின் ரகசியம் குறித்தும் பேசினார்.
தனது படங்களுக்கு ஏற்ப டயட் மற்றும் வொர்க்அவுட்டை மாற்றிக் கொள்வதாக அல்லு அர்ஜுன் பகிர்ந்துள்ளார். இருப்பினும், தினமும் காலை ஒரு வழக்கத்தை தவறாமல் பின்பற்றுவதாகவும், அது தன்னை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
அல்லு அர்ஜுன் டயட், ஃபிட்னெஸ் சீக்ரெட்
புஷ்பா 2 குடும்பப் படம் என்பதால், அந்த படத்திற்கு கடுமையான டயட்டைப் பின்பற்றவில்லை என்றும் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார். தனது காலை உணவு எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும்போது, அவரது மதிய உணவு மற்றும் இரவு உணவு மாறுபடும் என்று பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர் “காலை உணவு பெரும்பாலும் ஒரே மாதிரியாக இருக்கும். எப்போதும் முட்டைள் நிறைந்த காலை உணவை சாப்பிடுவேன். இரவு உணவு சூழலுக்கு தகுந்தது போல் மாறும்.” என்று தெரிவித்தார்.
தனது காலைப் பழக்கத்தை பற்றி பேசிய அல்லு அர்ஜுன் “நான் வெறும் வயிற்றில் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஓடுவேன். எனக்கு எனர்ஜி இருந்தால் வாரத்தின் 7 நாட்களும் ஓடுவேன். ஆனால் சோம்பேறியாக இருந்தால் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே ஓடுவேன்” என்று தெரிவித்தார்.
உடற்தகுதி என்பது ஒரு மனநிலை சவால் என்று கூறிய அல்லு அர்ஜுன் ” நல்ல உடலை விட ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வது மிகவும் முக்கியம்” என்று கூறினார். மேலும் தனக்கு சில பால் பொருட்களுக்கு அலர்ஜி இருப்பதால் அவற்றைத் தவிர்ப்பதாக அவர் கூறினார்.