ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஒரு பெரிய அப்டேட் வந்துள்ளது. அதாவது, ஆதார் அட்டையை கடந்த 10 ஆண்டுகள் புதுப்பிக்காமல், கிழிந்த அதார் அட்டை, அல்லது புதுப்பிக்காமல் இருந்தால் அதை இலவசமாக புதுப்பிக்கும் நாள் 2023 டிசம்பர் 14 ஆக நிர்ணயித்திருந்தது. இந்நிலையில், அரசு தரப்பில் ஆதார் அட்டையில் விவரங்களை புதுப்பிப்பதற்கான கடைசி நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மார்ச் 14, 2024 வரை Myaadhaar போர்ட்டல் மூலம் இலவசமாக ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை புதுப்பிக்கும் அறிவிப்பு குறித்து UIDAI வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆதார் அட்டை வைத்திருக்கும் அனைவரும் டிசம்பர் 15, 2023 முதல் மார்ச் 14, 2024 வரை உங்கள் விவரங்களை myAadhaar போர்ட்டல் மூலம் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம என தெரிவித்துள்ளது.
இருப்பினும், myAadhaar போர்ட்டலில் மட்டுமே இந்தச் சேவை இலவசம் என்பதை பயனர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதற்கு முன்பு இருந்ததைப் போலவே, ஆதார் மையங்களுக்குச் சென்று ஆதார் விவரங்களை புதுப்பிக்கச் சென்றால் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். கடந்த 10 ஆண்டுகளில் ஆதார் விவரங்களைப் புதுப்பிக்கவில்லை என்றால், ஆதார் விவரங்களைப் புதுப்பிக்க வேண்டும் என்று UIDAI கடந்த பல மாதங்களாக மக்களை வற்புறுத்தி வருகிறது. ஆதார் தொடர்பான மோசடிகளைத் தடுக்க பயனர்கள் தங்கள் விவரங்களை புதுப்பிக்குமாறு UIDAI தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.