இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கிய அடையாள அட்டையாக மாறிவிட்டது. இன்னும் சொல்லப்போனால் இன்று ஆதார் இல்லாமல் எதுவுமே இல்லை என்ற சூழல் உருவாகிவிட்டது. செல்போன் எண் வாங்குவது முதல் வங்கி வரையிலான அனைத்து பயன்பாட்டிற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதனால் தனிப்பட்ட நபரின் அனைத்து வித ஆவணங்களும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. மறுபக்கம் ஆதார் அட்டையை மோசடியாக பயன்படுத்தி ஒரு நபரின் விவரங்களையும், வங்கிக் கணக்கில் உள்ள பணத்தையும் அபகரிக்க முடியும் எனவும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வைரலாகி வருகிறது.
ஆனால், ஒரு நபரின் ஆதார் அடையாள எண்ணை வைத்து இது போன்ற மோசடியில் யாரும் ஈடுபட முடியாது. இது போன்ற மோசடிகளை தவிர்க்க பொதுமக்கள் வங்கிக் கணக்குடன் தங்களது முக ஐடி, பயோமெட்ரிக் அங்கீகாரம் மற்றும் கருவிழி ஸ்கேன் போன்ற கூடுதல் பாதுகாப்பு முறைகளை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவை வங்கிக் கணக்குகளுக்கான கூடுதல் பாதுகாப்பாக செயல்படும் எனவும் உங்களது ஆதாரை பயன்படுத்தாத சமயங்களில் ஆதார் லாக்கிங் சிஸ்டம் மூலம் அதனை லாக் செய்து மோசடி செயல்களில் இருந்து உங்கள் ஆதார் மற்றும் மற்ற ஆவணங்களின் பாதிப்பிலிருந்து உங்களை பாதுகாக்கும் என அரசு தெரிவித்துள்ளது.