அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின், நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, அவர் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு ஆஜர்படுத்தப்பட்டார். முன்னதாக, அமலாக்கத்துறை விசாரணை நடத்த ஆகஸ்ட் 7ஆம் தேதி நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
அதன்படி, ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜியை, ஆகஸ்ட் 25ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டது.
அதன்படி, இன்றுடன் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில், சென்னை சிறப்பு நிதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ரவி, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும், அடுத்த காவல் நீட்டிப்புக்கு நேரில் ஆஜராக தேவையில்லை என்றும், காணொலி காட்சி மூலமாக ஆஜாரனால் போதும் என்றும் நீதிபதி தெரிவித்தார்.