நடப்பு நிதியாண்டில், கேம்பஸ் இன்டர்வியூ மூலம் புதியவர்களை தேர்வு செய்வதை குறைக்க இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முடிவு செய்துள்ளதாக டீம்லீஸ் தெரிவித்துள்ளது.
ஆட்சேர்ப்பு நிறுவனமான டீம்லீஸ் டிஜிட்டல் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”ஐ.டி நிறுவனங்கள் 2023-24ஆம் நிதியாண்டில், வளாக நேர்காணல்கள் மூலம் 1.55 லட்சம் பேரை பணியமர்த்த கூடுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது கடந்த 2022-23 வளாக நேர்காணல்கள் மூலம் தேர்வான 2.30 லட்சம் பேரை விட குறைவாகும். இது ஏறக்குறைய 48% சரிவாகும். கொரோனா தொற்று முடிவுக்கு வந்த பின், 2022இல் 6 லட்சம் பேர் பணியமர்த்தப்பட்டதோடு ஒப்பிடுகையில், இது மோசமான சரிவாகும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விப்ரோ நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு துறை தலைவர் சவுரப் கோவில் கூறுகையில், “ச்நாங்கள் வழங்கிய ஆஃபர்களை முதலில் மதிக்க விரும்புவதால், நேர்காணலுக்கு வளாகத்திற்கு செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்துள்ளோம். ஒரு வருடத்திற்கு முன்பு இருந்ததை விட இன்று திறமைக்கான சூழல் வேறுபட்டுள்ளது. தேவைக்கு முன்னதாக பணியமர்த்துவதற்கான சூழல், வளர்ச்சி குறைவு மற்றும் தற்போதைய பொருளாதார நிச்சயமற்ற தன்மையின் காரணமாக அணுகுமுறை மாற்றப்பட்டுள்ளது” என்றார்.
இன்ஃபோசிஸ் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் கடந்த ஏப்ரலில் கூறுகையில், ”நாங்கள் உண்மையில் கடந்த ஆண்டு 51,000 புதியவர்களை வேலைக்கு அமர்த்தினோம். அவர்களில் பலர் திறமையானவர்களாகவும், பயிற்சி பெற்றவர்களாகவும் இருக்கிறார்கள். எனவே, இந்த கட்டத்தில் 2023-24இல் குறிப்பிட்ட எண் எதுவும் எங்களிடம் இல்லை. இப்போது இருப்பவர்களே போதுமானதாக உள்ளது” என்று கூறினார்.
டி.சி.எஸ். நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் மில்லியந்த் லக்காடு கூறுகையில், “கடந்த ஏப்ரலில், நடப்பு நிதியாண்டில் 40 ஆயிரம் பேரை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் தேர்வு செய்ய உள்ளோம். ஆட்குறைப்பு நடவடிக்கை பரவலாக குறையும். ஆட்குறைப்பால் உருவான 13 – 14 சதவீதம் பணியிடங்கள் மீண்டும் நிரப்பப்படும்” என்றார். 2022ஆம் நிதியாண்டில், டி.சி.எஸ். 1.10 லட்சம் புதியவர்களை கேம்பஸ் இண்டர்வியூ மூலம் பணியமர்த்தி இருந்தது. 2022-23ஆம் நிதியாண்டில், 44 ஆயிரம் பேரை பணியமர்த்தியது குறிப்பிடத்தக்கது.