சென்னையில் பொதுமக்களின் வசதிக்காக மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் இருந்து அருகே உள்ள மாவட்டங்களுக்கும், அருகே உள்ள மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் மின்சார ரயில்களில் பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் என தினமும் ஏராளமானவர்கள் மின்சார ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இதற்கிடையே தான் அவ்வப்போது தண்டவாள பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணியின் காரணமாக அவ்வப்போது ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன.
அந்த வகையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நாளை (அக். 27) மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் அனைத்து மின்சார ரயில்களும் நாளை அதிகாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இருந்து அதிகாலை 5 மணி முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு 23 சிறப்பு ரயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
சென்னை பூங்காவில் இருந்து 14 சிறப்பு ரயில்கள் தாம்பரத்திற்கு இயக்கப்படும். அதேபோன்று, செங்கல்பட்டில் இருந்து அதிகாலை 4 மணியில் இருந்து 30 நிமிட இடைவெளியில் பூங்கா ரயில் நிலையத்திற்கு 25 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து அதிகாலை 3.55 மணியில் இருந்து 30 நிமிட இடைவெளியில் சென்னை பூங்கா ரயில் நிலையத்திற்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். மாலை 5 மணிக்குப் பிறகு ஞாயிறு அட்டவணைப்படி ரயில்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Read more ; தீபாவளிக்கு காண்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துகிறீர்களா? மருத்துவர்கள் எச்சரிக்கை