10-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராமாவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற துணை தேர்வு முடிவுகள் இன்று மாலை 3 மணிக்கு அரசு தேர்வு துறையின் www.dge.tn.gov.im என்ற இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களின் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை உள்ளீடு செய்து மதிப்பெண் விபரங்களை தெரிந்து கொள்ளலாம். மேலும் அவர்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் மறுக்கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் அரசு தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். மறுக்கூட்டல் கட்டணமாக பாடம் ஒன்றுக்கு ரூ.205 வீதம் செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம். மறு கூட்டல் முடிவுகள் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.