வாடிகனில் உள்ள தனது வீட்டில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக கருதப்படுபவர் போப் ஆண்டவர். இவருக்கு வயது 88. ஐரோப்பிய நாடான இத்தாலியின் தலைநகர் ரோம், வாடிகன் நகரில் வசித்து வந்தார். அவருக்கு, சமீபத்தில் மூச்சுக்குழாயில் அழற்சி, சிறுநீரகப் பிரச்னை இருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது. அவருக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நிமோனியா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் கூறியிருந்தது.
இந்த நிலையில் வாடிகனில் உள்ள அவரது இல்லத்தில் போப் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. போப்பின் மறைவு உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை 7.30 மணி அளவில் உயிரிழந்ததாக வாடிகன் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற ஈஸ்டர் பண்டிகையில் கலந்து கொண்டு வாழ்த்து செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு அமெரிக்க துணை அதிபர் ஜேடி வான்ச் உள்ளிட்டோர் போப் ஆண்டவரை சந்தித்து ஆசி பெற்றனர். 2013 ஆம் ஆண்டு முதல் தற்போத்டு வரை கத்தோலிக்க கிறிஸ்தவ சபையில் தலைவராக போப் பிரான்சிஸ் இருந்து வந்தார். 2013 ஆம் ஆண்டு போப் பதவியில் இருந்து 26 வது பெனடிக்ட் விலகியதை தொடர்ந்து பிரான்சிஸ் போப் ஆண்டவர் ஆனார்.