மகாத்மா என்று அழைக்கப்படும் இந்திய சுதந்திரத்தின் தந்தை காந்தியடிகள் 1969ம் ஆண்டு அக்டோபர் 2ம் தேதி பிறந்தார். ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்தநாள் காந்தி ஜெயந்தி என்ற பெயரில் இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. மேலும், இந்த நாள் உலக அளவில் வன்முறைக்கு எதிரான நாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அவரது வாழ்க்கை தொகுப்பு குறித்து பார்க்கலாம். காந்தியடிகளின் இயற்பெயர், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. குஜராத் பகுதியின் போர்பந்தரில், அக்டோபர் 02, 1869 அன்று பிறந்தார். அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி போர்பந்தர் பகுதியின் தலைமை அமைச்சராக இருந்தவர்.
கடைசியாக பிறந்தவர் காந்தி. அவருடன் இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் இருந்தனர். ராஜ்கோட்டில் மேல்நிலைக் கல்வி பயின்றபோது, காந்தி தன் சிறுவயதிலேயே நிச்சயிக்கப்பட்ட, கஸ்தூர்பாவை மணந்துகொண்டார். மோகன்தாஸ் காந்தியின் 16-வது வயதில், அவரின் தந்தை கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி மரணமடைந்தார். காந்தியின் தாயார் மத நம்பிக்கைகள் நிறைந்த ஒரு பெண்மணி. மிகவும் கட்டுப்பாடுகளோடு வளர்க்கப்பட்ட காந்தி வளர்ந்தவுடன், அவரது குடும்பவிதிமுறைகளை மீற தொடங்கினார்.காந்தி தனது 19-வது வயதில், கல்வி பயில்வதற்காக இங்கிலாந்துக்குப் பயணம் மேற்கொண்டார். காந்தி முதன்முதலாகப் பகவத் கீதை புத்தகத்தைப் படித்தபோது, அவருக்கு வயது 20. பகவத் கீதை காந்தியின் மனதை ஈர்த்த புத்தகங்களுள் முதன்மையானது.
படிப்புக்காக இங்கிலாந்து சென்று மூன்று ஆண்டுகள் கழித்து, இந்தியா திரும்பினார் காந்தி. மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்ற முயன்று, சிறிது காலம் சட்ட வரைவாளராகப் பணியாற்றினார். 1893-ம் ஆண்டு, இந்தியாவில் இருந்து தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொண்டார். ரயில் பயணத்தின்போது, நிறம் காரணமாக அவமானப்படுத்தப்பட்டார் காந்தி. தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய நிறவெறிக்கு எதிராக, நாட்டல் இந்திய காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்தார்.
தென்னாப்பிரிக்காவின் நாட்டல் பகுதியின் உச்ச நீதிமன்றத்தில் பதிவுசெய்த முதல் இந்திய வழக்கறிஞர் காந்தி. இந்தியாவின் சுதந்திர போராட்டத்தின் முதன்மை தலைவர் இவர்தான் . மகாத்மா காந்தி என்று அன்போடு அழைக்கப்படும் இவர், இந்தியாவை சுதந்திரத்திற்கு அழைத்துச் சென்றது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் சுதந்திரத்திற்கான இயக்கங்களை ஊக்கப்படுத்தினார். அகிம்சை முறையில் போராடிய இவர், பிரிட்டிஷ் விதித்த உப்பு வரிக்கு எதிராக மாபெரும் உப்பு சத்தியாகிரகத்தை வழிநடத்தினார். இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் அரசு வெளியேறவேண்டும் என்று கோரி வெகுஜன ஆர்ப்பாட்டமான “வெள்ளையேனே வெளியேறு” இயக்கத்தைத் தொடங்கினார்.
பிரிட்டிஷ் இந்தியாவில் ஒரு மதக் கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பத்தில் பிறந்த இவர், சகிப்புத்தன்மை, எளிமை மற்றும் நியாயமான கொள்கைகள் கொண்டவராக பெற்றோர்களால் வளர்க்கப்பட்டார். பின் சட்டம் படிக்க இங்கிலாந்து சென்று, அதற்கு பிறகு தென்னாப்பிரிக்காவில் வேலை செய்யத் தொடங்கினார். அங்கு தலைவிரித்தாடிய இனவெறி மற்றும் பாகுபாடு ஆகியவை அவரை மிகவும் கோவப்படுத்தியது. சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னாப்பிரிக்காவில் இருந்து சமூக நீதிக்கான வலுவான உணர்வை வளர்த்துக்கொண்ட காந்திஜி, பல சமூக பிரச்சாரங்களுக்கு தலைமை தாங்கினார்.
சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக செயல்பட்டு, இறுதியில் தனது தாய்நாட்டை பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து சுதந்திரத்திற்கு அழைத்துச் சென்றார். பெண்களின் உரிமைகள், மதசகிப்புத்தன்மை மற்றும் வறுமையை ஒழித்தல் ஆகியவற்றிற்காக தீவிரமாக பிரச்சாரம் செய்த நம் காந்திஜி. 20 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னாப்பிரிக்காவில் இருந்த காந்தி ஒரு அச்சமற்ற சிவில் உரிமை ஆர்வலர் என்ற நற்பெயரைப் பெற்றார். பின் இந்திய தேசியகாங்கிரசின் மூத்த தலைவரான கோபால் கிருஷ்ணா கோகலே, காந்தியிடம் இந்தியாவுக்குத் திரும்பி, இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் மற்றவர்களுடன் இணையுமாறு கேட்டுக்கொண்டார்.
இதனால் காந்தி1915 இல் இந்தியா திரும்பினார். பின் இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்தார், 1920 ஆம் ஆண்டுவாக்கில் இந்திய அரசியலில் தன்னை ஒரு முக்கிய நபராக நிலைநிறுத்திக் கொண்டார். அகிம்சைக் கொள்கையை கடுமையாக கடைப்பிடித்த காந்தி, பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்ப்பதற்கு அகிம்சை நடவடிக்கைகள் தான் சிறந்தவழிமுறைகள் என்று உறுதியாக நம்பினார். நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் மதம், சாதி என்ற பிளவுகள் இல்லாமல், அனைத்து இந்தியர்களும் ஒன்றுபட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.
1920 களின் கடைசியில், பிரிட்டிஷ் அரசாங்கம் சர் ஜான் சைமனின் கீழ் ஒரு புதிய அரசியலமைப்பு சீர்திருத்த ஆணையத்தை நியமித்தது, ஆனால் அதில் எந்தவொரு இந்தியரையும் உறுப்பினராக சேர்க்கவில்லை. இது காந்தியை கோபப்படுத்தியது, அதனால் காங்கிரஸ் இந்தியாவுக்கு ஆதிக்க அந்தஸ்தை வழங்குமாறு பிரிட்டிஷை கோரினார்கள். அப்படி தரவில்லை என்றால், மற்றொரு ஒத்துழைப்பு பிரச்சாரத்தை நடத்தபோவதாக எச்சரிக்கை செய்தார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் இதற்கு பதிலளிக்கவில்லை. இதனா இந்திய தேசிய காங்கிரஸ் இந்தியாவின் சுதந்திரத்தை தாமாக அறிவிக்க முடிவு செய்தார்கள்.
டிசம்பர் 31, 1929 அன்று, இந்திய தேசிய காங்கிரசின் லாகூர் அமர்வில் இந்தியாவின் கொடி ஏற்றப்பட்டது மற்றும் இந்தியாவின் சுதந்திரம் அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுமையான சுதந்திரம் பெறும் வரை தங்களது ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுமாறு காங்கிரஸ் மக்களை அழைத்தது. அதே நேரத்தில், பிரிட்டிஷ் உப்புச்சட்டங்கள் இந்தியர்களை உப்பு சேகரிப்பதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்தன, மேலும் அதிக வரிவிதிக்கப்பட்ட பிரிட்டிஷ் உப்பை வாங்கும்படி மக்களை கட்டாயப்படுத்தின. இதை எதிர்த்து காந்தி 1930 ஆம்ஆண்டு மார்ச்சில் அகிம்சை போராட்டமாக உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கினார்.
அஹமதாபாத்தில் இருந்து குஜராத்தின் தண்டி வரை சுமார் 388 கிலோமீட்டர் தூரம் அணிவகுத்துச் சென்றார். பிரிட்டிஷ்ஆட்சிக்கு எதிரான இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் அவருடன் சேர்ந்து கொண்டனர். இதனால் கோவமடைந்த ஆங்கிலேயேர்கள் காந்தியோடு சேர்த்து சுமார் 60,000 இந்தியர்களை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். 1939 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போர் வெடித்த நேரத்தில் இங்கேயும் தேசியவாத இயக்கம் அதிகவேகத்தை அடைந்தது. போர் நடக்கும் போதே, காந்தி இந்தியாவில் இருந்து பிரிட்டிஷ் வெளியேற வேண்டும் என்று கோரி ,வெள்ளையேனே வெளியேறு என மற்றொரு இயக்கம் ஒன்றைத் தொடங்கினார்.
பல்வேறு மதங்களையும் சமூகங்களையும் சேர்ந்த இந்தியர்களை ஒன்றிணைக்க தனிப்பட்ட முறையில் முயன்ற காந்தியடிகள், ஆகஸ்ட் 16, 1946 அன்று முஸ்லீம் லீக் ஒரு நிகழ்ச்சி நடத்திய போது, அது கல்கத்தா நகரில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பரவலான கலவரம் மற்றும் படுகொலைக்கு வழிவகுத்தது. இதனால் கலக்கமடைந்த காந்தி தனிப்பட்ட முறையில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று படுகொலைகளை நிறுத்த முயன்றார். இறுதியாக ஆகஸ்ட் 15, 1947 இல் சுதந்திரம் அடைந்தபோது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என இரண்டு புதிய ஆதிக்கங்கள் உருவானது.
ரவீந்திரநாத் தாகூர், “மகாத்மா” (சமஸ்கிருதத்தில் “சிறந்த ஆத்மா” என்ற பொருள்படும்) என்ற பட்டத்தை காந்திக்கு வழங்கினார். ‘டைம்’ பத்திரிகை 1930 ஆம் ஆண்டில் காந்தியை “ஆண்டின் சிறந்த மனிதர்” என்று பெயரிட்டது. காந்தி 1937 மற்றும் 1948 க்கு இடையில் ஐந்து முறை அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டார், ஆனால் அவருக்கு ஒருபோதும் பரிசு வழங்கப்படவில்லை. நோபல் குழு பல வருடங்கள் கழித்து, காந்திக்கு விருது வழங்காததற்கு தனது வருத்தத்தை பகிரங்கமாக அறிவித்தது.
தில்லியில் உள்ள பிர்லா ஹவுஸில் (காந்தி ஸ்மிருதி) வைத்து காந்தி கொல்லப்பட்டார். இந்துதேசியவாதத்தை சேர்ந்த நாதுராம் விநாயக் கோட்சே என்பவன் காந்தியின் மார்பில் மூன்று தோட்டாக்களை சுட்டு, 1948 ஜனவரி 30 அன்று அவரை படுகொலை செய்தான். அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்னர், ஐந்து முறை அவரை கொல்லவும் முயற்சி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.