ஆபாசப் புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் தனிப்பட்ட நேரத்தில் பார்ப்பது சட்டப்படி குற்றமாகாது, அது தனிப்பட்ட விருப்பம் என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2016-ம் ஆண்டு சாலையோரத்தில் மொபைல் போனில் ஆபாச வீடியோக்களை பார்த்துக் கொண்டிருந்த 33 வயது நபர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 292-வது பிரிவின் கீழ் ஆபாசமாக நடந்து கொண்டதாக வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பான வழக்கு கேரள உயர்நீதிமன்றம் நீதிபதி பி.வி.குன்ஹிகிருஷ்ணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆபாசப் படங்கள் பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருப்பதாகவும், புதிய டிஜிட்டல் யுகம் குழந்தைகளுக்கும் கூட அதை அணுகக்கூடியதாக மாற்றியுள்ளது என்றும் கூறினார். “
மேலும், “ஒரு நபர் தனது அந்தரங்கத்தில் ஆபாசமான புகைப்படத்தைப் பார்ப்பது ஐபிசியின் 292 (ஆபாசம்) பிரிவின் கீழ் குற்றமாகாது என்று நான் கருதுகிறேன். அதேபோல், ஒரு நபர் தனது தனியுரிமையில் மொபைல் போனில் இருந்து ஆபாசமான வீடியோவைப் பார்ப்பது பிரிவு 292 ஐபிசியின் கீழ் குற்றம் அல்ல என்றும்
“குற்றம் சாட்டப்பட்டவர் ஏதேனும் ஆபாசமான வீடியோ அல்லது புகைப்படங்களை பரப்பவோ அல்லது பகிரங்கமாக காட்சிப்படுத்தவோ முயன்றால், IPC 292 பிரிவின் கீழ் அது குற்றமாகும் என்றும் நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் கூறினார். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த குற்றமும் இல்லை என்று கூறி, இந்த வழக்கு தொடர்பாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடந்த அனைத்து நடவடிக்கைகளையும் ரத்து செய்து நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் உத்தரவிட்டார்.
அதே சமயம், குழந்தைகளை மகிழ்விப்பதற்காக இணைய வசதியுடன் கூடிய மொபைல் போன்களை வழங்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்த நீதிபதி, இதன் பின்னணியில் உள்ள ஆபத்து குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். குழந்தைகள் தங்கள் பெற்றோரின் மொபைல் போன்களில் இருந்து தகவல் தரும் செய்திகளையும் வீடியோக்களையும் மட்டும் அவர்கள் முன்னிலையில் பார்க்கவேண்டும், பெற்றோர்கள் மைனர் குழந்தைகளை மகிழ்விப்பதற்காக ஒருபோதும் மொபைல் போன்களை ஒப்படைக்கக்கூடாது என்றும் நீதிபதி கூறினார்.
இதுமட்டுமல்லாமல், மொபைல் போன்களில் ஆபாச வீடியோக்களை மைனர் குழந்தைகள் பார்க்கத் தொடங்கினால், “தீவிர விளைவுகளை ஏற்படுத்தும்” என்றும் குழந்தைகள் தங்கள் ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் அல்லது கால்பந்து அல்லது அவர்கள் விரும்பும் பிற விளையாட்டுகளை விளையாட விடுங்கள். எதிர்காலத்தில் நமது தேசத்தின் நம்பிக்கையின் கலங்கரை விளக்கங்களாக மாறும் ஆரோக்கியமான இளம் தலைமுறைக்கு இது அவசியம் என்று நீதிபதி குன்ஹிகிருஷ்ணன் கூறினார்.