குரூப் 2, 2ஏ தேர்வின் முடிவுகளை விரைவில் வெளியிட நடவடிக்கை மேற்காெள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைத்தின் செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது; ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான தேர்வு 2, 2ஏ முதல் நிலை எழுத்துத் தேர்வு மே மாதம் 21-ம் தேதி நடைபெற்றது. இதற்கிடையே மகளிருக்கான இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தன.
இந்த வழக்குகளில் உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பினை வழங்கிய நிலையில், அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகப் பல்வேறு கட்ட கலந்து ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைகளை செயல்படுத்துவது தொடர்பாக மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யும் பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. அந்தப்பணி நிறைவுற்ற பின்னர் குரூப் 2, 2ஏ தேர்வின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்.
மேலும் தேர்வர்கள் ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் எனவும், அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் https://www.tnpsc.gov.in மட்டுமே அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.