நாட்டின் 75-வது சுதந்திர தினத்திலும் ஆர்டர்லி முறையை பின்பற்றுவது வெட்கக்கேடானது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது..
ஆர்டர்லி முறை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் அவ்வப்போது பல அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது. இந்நிலையில் இதுதொடர்பான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.. அப்போது 19 ஆர்டர்லிகளை திரும்ப பெற்றதாக தமிழக அரசு தரப்பு தெரிவித்தது.. 19 ஆர்டர்லிகள் தான் திரும்ப பெறப்பட்டுள்ளனரா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, முதலமைச்சரின் வெறும் எச்சரிக்கை மட்டும் போதாது எனவும் நடவடிக்கை எடுப்பது அவசியம் என்றும் குறிப்பிட்டார்..
தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலத்தில் ஆர்டர்லி முறை நடைமுறையில் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.. ஆர்டர்லி முறையை இன்னும் பின்பற்றுவது வெட்கக்கேடானது என்றும், வரும் சுதந்திர தினத்திற்கு முன் ஆர்டர்லி முறையை ஒழிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார். ஆர்டர்லி முறையை ஒழிக்க ஒரு வார்த்தை போதும், ஆனால் அரசிடமிருந்தோ, டிஜிபியிடமிருந்தோ அந்த வார்த்தை வருவதில்லை என்று கூறிய நீதிபதி ஆர்டர்லி முறை ஒழிப்பு தொடர்பாக உள்துறை முதன்மை செயலாளரின் உத்தரவை அமல்படுத்த, எடுத்த நடவடிக்கை குறித்து டிஜிபி அறிக்கை அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்..