இலவசம் தவறு என்று பிரதமர் மோடி கூறுவது அந்த கட்சியின் நிலைப்பாடு என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, “திமுக அரசின் புதுமைப்பெண் திட்டத்தை வரவேற்று இருப்பதன் மூலம் ரவீந்திரநாத் ஏற்கனவே திமுகவுடன் இருக்கும் நெருக்கத்தை உறுதிப்படுத்தியுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறார். விசாரணைக்கு பின்னர் தெரியும். இப்போது அதுபற்றி கருத்து கூற முடியாது. இலவசங்கள் தொடர்பாக ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. இலவசம் தவறு என்று பிரதமர் மோடி கூறுவது அந்த கட்சியின் நிலைப்பாடு.

ஆனால் எம்ஜிஆர் ஆட்சியிலும், ஜெயலலிதா ஆட்சியிலும் எண்ணற்ற இலவச திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். எதிர்காலத்திலும் மக்களுக்கு என்ன தேவையோ அதை நாங்கள் செய்வோம். நான் ஆட்சியில் இருந்த போதும் போராடினேன். எதிர்க்கட்சியாக இருக்கும்போதும் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன். பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை போராடிக்கொண்டுதான் இருக்கிறேன். தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. மக்களுக்கு நன்மை கிடைக்கும் எந்த திட்டத்தையும் திமுக கொண்டுவரவில்லை. திமுக ஆட்சியில் சொத்து வரி, வீட்டு வரி, மின் கட்டணம் உயர்ந்துள்ளது. வாக்களித்த மக்களை அவர்கள் ஏமாற்றியுள்ளனர்.

இந்தியாவிலேயே அதிக தார்ச்சாலைகள் உள்ள மாநிலம் தமிழகம் என்பதை அதிமுக ஆட்சியில் தான் உருவாக்கினோம். மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000, கல்விக்கடன் தள்ளுபடி, முதியோர் உதவித்தொகை, கியாஸ் மானியம், பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு என எதையும் திமுக அரசு செய்யவில்லை. ஆன்லைன் ரம்மி சூதாட்டம் தொடர்பாக நாங்கள் சட்டமே நிறைவேற்றினோம். ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தை தடை செய்ய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் முதலமைச்சர் அதற்கு கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துகிறார். சூதாட்டத்துக்கு கருத்து கூட்டம் நடத்தும் ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டும் தான்”. இவ்வாறு அவர் பேசினார்.