முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”பொருளாதார நிபுணர் முன்னாள் இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் இழப்பானது காங்கிரஸுக்கு மட்டுமல்ல நாட்டுக்கே மிகப்பெரிய இழப்பாகும்.
குறிப்பாக, தமிழ்நாட்டினுடைய உட்கட்டமைப்பு வசதிகளை பெருக்குவதற்கும், பல்வேறு திட்டங்களை உருவாக்கித் தருவதற்கும் மன்மோகன் சிங் துணை நின்றிருக்கிறார். அதேபோல் 100 நாட்கள் வேலைத்திட்டம் என்கிற ஒரு புரட்சிகரமான திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் மன்மோகன் சிங். எல்லாவற்றையும் தாண்டி, தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்தை, சோனியா காந்தியின் துணையோடு அறிவித்து நிறைவேற்றித் தந்தவர்.
மறைந்த முதல்வர் கருணாநிதியோடு நெருங்கி நட்புணர்வோடு பழகக்கூடியவராக இருந்தவர். அவர் மறைந்துவிட்டார் என்பது வேதனைக்குரிய ஒன்று. அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், காங்கிரஸ் பேரியக்கத்துக்கும், திமுகவின் சார்பில் என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு மெட்ரோ ரயில் திட்டம் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறது என்றால், அதற்கு காரணம் அவர் தான். கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் கொண்டு வந்ததும் அவர் தான்” என்று புகழாரம் சூட்டினார்.