திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே எரும்பி கிராமத்தில் வள்ளியம்மாள் (82) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது கணவர் மாணிக்கம் ஏற்கனவே இறந்து விட்ட நிலையில், இவரது மகன் கஜேந்திரன், உதவி காவல் ஆய்வாளராக பணியாற்றி ஓய்வுபெற்று குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இந்நிலையில், வள்ளியம்மாள் மட்டும் தனது சொந்த ஊரான எரும்பி கிராமத்தில் வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று வெகுநேரமாகியும் வள்ளியம்மாள் வீடு பூட்டி இருந்ததால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை திறக்க முயன்றனர். ஆனால், கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் வள்ளியம்மாள் இறந்து கிடந்ததார்.
இதனால், பதறிப்போன அக்கம்பக்கத்தினர் ஆர்.கே.பேட்டை போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், மூதாட்டி வள்ளியம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சந்தேகத்தின் பேரில் வினோத்குமார், சதீஷ் ஆகிய இருவரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக கூறியதால், காவல் நிலையம் அழைத்துச் சென்று உரிய முறையில் விசாரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
”மூதாட்டி வீட்டில் தனியாக வசித்து வருவதை நோட்டமிட்டு வந்தோம். அதோடு நெக்லஸ், வளையல், கம்மல், மூக்குத்து உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் அணிந்திருப்பதை நோட்டமிட்டு இரவு நேரத்தில் வீட்டில் புகுந்தோம். அங்கு சென்றபிறகு நகைகள் அனைத்தும் கவரிங் என்று தெரிந்ததால் ஆவேசமடைந்து மூதாட்டியின் தலையில் இரும்பு ராடால் கடுமையாக தாக்கி கொலை செய்தோம். போலீசாரிடம் சிக்காமல் இருக்க வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவிச் சென்றோம்” என்று கூறினர். பின்னர் அவர்களை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.