ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் இச்சாபுரம் பகுதியைச் சேர்ந்த வேணு என்பவருக்கும் (26), ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பிரவல்லிகா (23) என்ற பெண்ணுக்கும் கடந்த 10ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, மணமகன் வீட்டில் இளம்தம்பதி ஒன்றாக இருந்தனர். பின்னர் கடந்த 13ஆம் தேதி, இருசக்கர வாகனத்தில் புதுமண தம்பதியினர் இருவரும் மணமகளின் வீட்டிற்கு விருந்துக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆந்திரா-ஒடிசா மாநில எல்லையில், கொல்லாந்திரா எனும் இடத்தில் பின்னால் வேகமாக வந்த டிராக்டர் ஒன்று தம்பதியினரின் வாகனம் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மணமகன் வேணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மணமகள் பிரவல்லிகா படுகாயமடைந்து சாலையில் போராடிக்கொண்டிருந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரும் பரிதாபமாக உயிரிழந்தார். திருமணமாகி வெறும் 3 நாட்களில் புதுமண தம்பதியினர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.