தேவர் ஜெயந்தியன்று தங்கக்கவசம் அணிவிக்கும் உரிமைக்கு எடப்பாடி தரப்பும், ஓபிஎஸ் தரப்பும் மாறி மாறி உரிமை கோரி வருவதால், வங்கி நிர்வாகம் குழப்பமடைந்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அதிமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2014ஆம் ஆண்டு 3.5 கோடி மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கியிருந்தார். ஒவ்வொரு தேவர் ஜெயந்தியன்றும் அதிமுக சார்பில் அந்த தங்கக்கவசம் முத்துராமலிங்கதேவர் சிலைக்கு அணிவிக்கப்பட்டு வந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் அந்த தங்கக்கவசம் மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆஃப் இந்தியா வங்கி பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படும். அதிமுகவின் பொருளாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்த வரை வங்கிக்கு நேரில் சென்று, கவசத்தை பெற்று முத்துராமலிங்கத் தேவர் குடும்பத்தினர், நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்து, குருபூஜை முடிந்த பின்னர் அதனை மீண்டும் பெற்று வங்கியில் ஒப்படைத்து வந்தார்.
இந்நிலையில், தற்போது அதிமுகவில் ஓபிஎஸ் நீக்கப்பட்டு, திண்டுக்கல் சீனிவாசன் பொருளாளராக நியமிக்கப்பட்ட பின்னர், இந்த தங்க கவசத்துக்கு உரிமை கோருவதற்காக திண்டுக்கல் சீனிவாசன் கடந்த வாரம் எழுத்துப்பூர்வ கடிதத்தை அதிமுக சார்பில் வங்கி நிர்வாகத்திடம் அளித்திருந்தார். மேலும், அதிமுக பொருளாளராக தான் நீடிப்பதாக ஓ.பன்னீர்செல்வமும் வங்கியில் கடிதம் அளித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களான ராஜ்யசபா எம்.பி தர்மர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் வங்கியில் கடிதத்தை வழங்கி உள்ளனர். அதில், தங்கக்கவசத்தை ஓ.பன்னீர்செல்வத்திடம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர். தங்க கவசத்தை ஒப்படைப்பதில் இருதரப்பும் உரிமை கோருவதால் வங்கி நிர்வாகம் குழப்பம் அடைந்துள்ளது.