2025 – 26ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட், சட்டமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த பட்ஜெட்டில் பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பெண்களுக்கான உரிமைத்தொகை 1,000 ரூபாய் உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல், விண்ணப்பித்த அனைவருக்குமே ஆயிரம் ரூபாய் கிடைக்குமா..? மேலும், விண்ணப்பிப்பதற்கான அறிவிப்புகள் வெளியாகுமா..? என்று பெண்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தற்போது, 1.15 கோடி மகளிருக்கு மாதந்தோறும் 15ஆம் தேதி ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், இதில், விடுபட்ட அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். எனவே, இதுகுறித்து அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது, திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட பல்வேறு அம்சங்கள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக திமுக அரசு கூறி வருகிறது. இதனால், மீதமுள்ள திட்டங்கள் குறித்த அறிவிப்புகள் இன்றைய பட்ஜெட்டில் வெளியாக வாய்ப்புள்ளது. அதேபோல், முதியோர் உதவி தொகை, கைம்பெண்களுக்கான உதவி தொகை அதிகரிக்கப்படும் என கூறப்படுகிறது.