தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது.
கிராமப்புற வறுமையை ஒழிப்பதற்காக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை கடந்த 2005ஆம் தேதி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின்படி, 100 நாள் வேலைத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை அட்டை வைத்திருப்பவர்கள் வேலை கோரினால் அவர்களுக்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் 100 நாள் வேலை வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் 25.25 கோடி பேர் பதிவு செய்துள்ள நிலையில், 14.35 கோடி பேர் தற்போது வேலை செய்து வருகின்றனர். குளம், ஏரி ஆழப்படுத்துதல், கால்வாய் புனரமைப்பு, சாலையை அகலப்படுத்துதல் போன்ற பணிகளில் 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். மேலும், இத்திட்டத்தில் வேலை நாட்களை அதிகரிக்க வேண்டும் வேண்டுமென்றும் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி, 17 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.319 ஆக இருந்த ஊதியம் தற்போது ரூ.336ஆக அதிகரித்து வழங்கப்படும். இந்த ஊதிய உயர்வு நடைமுறை ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதேசமயம், ஹரியானாவில் ரூ.26 உயர்த்தப்பட்டு ரூ.400ஆக 100 நாள் திட்ட ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.