தமிழ்நாட்டில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்கவும் தமிழ்நாடு அரசு பல்வேறு கடனுதவிகளை வழங்கி வருகிறது. இதன் ஒருபகுதியாக கடனில் 25% மானியம் வழங்கும் ஒரு திட்டம் உள்ளது. சொந்த தொழில் தொடங்க அரசு வங்கிகள் மூலம் ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை நிதியுதவி வழங்கப்படுகிறது.
கூடுதலாக, அரசாங்கம் வட்டி மானியத்தையும் வழங்குகிறது. உதாரணமாக ஒருவர் ரூ. 5 கோடி கடன் வாங்கியிருந்தால், அவரது கடனில் ரூ.75 லட்சம் வரை மானியம் பெற்று கொள்ளலாம். ஏனெனில் இது குறிப்பிடத்தக்க வகையில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் உதவியை அணுக அனுமதிக்கிறது. ஆர்வமுள்ள நபர்கள் நன்கு வரையறுக்கப்பட்ட வணிகத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் கடனை பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பாக, முதல் தலைமுறை தொழில் முனைவோரை இலக்காகக் கொண்டு இந்த ‘புதிய தொழில் முனைவோர் மற்றும் நிறுவன மேம்பாட்டுத் திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பை முடித்தவர்களுக்கும், ஐடிஐ அல்லது தொழிற்கல்வி திட்டங்களின் மூலம் டிகிரி, டிப்ளமோ படித்தவர்களுக்கும் இந்த முயற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
தகுதி என்ன..?
இந்த திட்டத்தில் கடன் பெற பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் 21 முதல் 45 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி பிரிவினர், பெண்கள், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் 21 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். கடனுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 3 ஆண்டுக்கு குறையாமல் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது..?
இந்த திட்டத்தில் தொழில்முனைவோருக்கு 25 சதவீத மானியம், அதாவது ரூ. 75 லட்சம் வரை வழங்கப்படும். கடனை முறையாக திருப்பிச் செலுத்துபவர்களுக்கு 3 சதவீத வட்டி மானியத்துடன் கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள https://www.msmeonline.tn.gov.in/needs என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு, அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.