தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீத போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளையொட்டி தமிழக அரசின் ’சி’ மற்றும் ’டி’ பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகங்கள், மின்சார வாரியம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், கூட்டுறவு பஞ்சாலைகள் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு ஊழியருக்கு தீபாவளி பண்டிகையையொட்டி தமிழக அரசு 10 சதவீத போனஸ் அறிவித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, ஒவ்வோரு துறையும் தனித்தனியாக தங்கள் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், டாஸ்மாக் ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.