மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை அகவிலைப்படி உயர்த்தப்படுகிறது. தற்போது, மத்திய அரசின் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவருக்கும் 42% அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலைப்படி நிவாரணத்தை பெற்று வருகின்றனர். நடப்பு ஜூன் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையிலான மாதங்களுக்கான அகவிலைப்படியானது இதுவரை அறிவிக்கப்படவில்லை.
ஆனால், ஏஐசிபிஐ தரவுகளின் படி, 3 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று கடந்த மாதம் அகில இந்திய ரயில்வே ஃபெடரேஷன் பொதுச்செயலாளர் சிவகோபால் மிஸ்ரா தெரிவித்திருந்தார். ஆனால், தற்போது ஜூன் மாதத்திற்கான புள்ளி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அகவிலைப்படி 4 சதவீதங்கள் உயர்த்தப்பட்டு மொத்தம் 46% அகவிலைப்படி உயர்வு மற்றும் நிவாரணத்தை ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பெறுவார்கள் என்று சில அறிக்கைகள் தெரிவித்துள்ளன.
மேலும், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது ஜி-20 உச்சி மாநாட்டிற்கு பிறகான அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு வெளியிடப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மத்திய அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.