வேலூர் மாவட்டத்தின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது வேலூர் கோட்டை. இந்த கோட்டை வளாகத்துக்குள் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமையான கோயிலாக கருதப்படுகிறது. இத்தலத்தில் உள்ள லிங்கம் சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி என்பவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இங்கு அருள் பாவிக்கும் சிவ பெருமானுக்கு ஜலகண்டேஸ்வரர் என்ற பெயர் வந்தது.
பொம்மி என்ற சிற்றரசர் அந்தப் பகுதியை ஆண்டு கொண்டிருந்த போது, அவரது கனவில் தோன்றிய சிவபெருமான், புற்றில் மூடப்பட்டிருந்த லிங்கம் இருக்கும் இடத்தை, அந்த சிற்றரசருக்கு கூறி, கோவில் எழுப்பும்படி கூறினார். ஈசனின் கட்டளையை ஏற்ற பொம்மி இந்த கோவிலை எழுப்பினார் எனக் கூறப்படுகிறது.
கங்கை நதிக்கு இணையான தண்ணீர் : இந்தக் கோவிலில் இருக்கும் கிணற்றில் உள்ள தண்ணீரானது, கங்கை நதிக்கு இணையாக கூறப்படுகிறது. இந்த ஈஸ்வரலிங்கம் லேசான கூம்பு வடிவத்தில் காணப்படுகிறது. இந்த லிங்கத்தின் பின்புறத்தில் காலபைரவர் காட்சி தருகின்றார். கங்கை, சிவன், பைரவர் மூவரையும் ஒன்றாக தரிசிக்கும் அரிதான காட்சியும் இங்குதான் காணப்படுகிறது. இவர்களை வழிபடுவதன் மூலம் காசி விஸ்வநாதரை வழிபட்ட புண்ணியம் கிடைப்பதாக வரலாறு கூறுகிறது.
கோவில் உட்புற அமைப்பு : இந்த கோவிலின் கோபுரம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. அதன் கம்பீரத்தை ரசித்துக்கொண்டே உள்ளே நுழைந்தால் வலது புறத்தில் குளமும், இடதுபுறத்தில் கல்யாண மண்டபமும் உள்ளது. கல்யாண மண்டபத் தூண்கள் மற்றும் கோயிலின் மற்ற தூண்களில் கண்ணைக் கவரும் ஆன்மீக சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கோயிலின் வெளிப்பிரகாரத்திலும் உள்பிரகாரத்திலும் கோயில் சுவர்களை ஒட்டி ஆறு அடி அகலத்திற்கு அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தூணைக்கொண்டு கட்டப்பட்ட மண்டபம் முழு நீளத்திற்கும் அமைந்துள்ளது.
உள்ளே நுழையும் போது வலம்புாி விநாயகர் அமர்ந்திருப்பதைக் காணலாம். வலம்புாி விநாயகரைத் தாிசித்து மேலே சென்றால் கோயிலின் நிர்வாக அலுவலகம் உள்ளது. இதனைத் தொடர்ந்து உட்பிரகார மடப்பள்ளி உள்ளது. அடுத்து 63 நாயன்மார்கள், பிள்ளையார், சப்தகன்னியர், வீரபத்திரர் ஆகியோர் உள்ளனர்.
மேலும், வெங்கடேசப்பெருமாள், வள்ளி தேவசேனாவுடன் சுப்பிரமணியர், மாதேஸ்வரி, வைஷ்ணவி, துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி, கால பைரவர், சனீஸ்வரர், 63 நாயன்மார்கள், நடராஜர், சிவகாமி, அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், பிரம்மா, விஷ்ணு, ஸ்ரீதேவி, பூதேவி, கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, லிங்கோத்பவர் ஆகியோர் உள்ளனர்.
Read more ; முகம் பார்க்க அல்ல.. லிப்ட்டின் உள்ளே கண்ணாடி ஏன் பொருத்தப்படுகிறது தெரியுமா?