தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அவர் வெளியிட்டுள்ள புகைப்பட பதிவில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை தவிர்த்துள்ளார்.
அதிமுக – பாஜக இடையேயான கூட்டணி 2 ஆண்டுகளுக்கு முன்னர் முறிந்த போது, நாள்தோறும் ஊடகங்களை சந்தித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து வந்தார் ஜெயக்குமார். பாஜகவுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை. அவர்களுடன் எப்போதும் கூட்டணி இல்லை என்றெல்லாம் பேசினார். இந்த சூழலில் தான், அமித்ஷா சென்னை வருகையின்போது அதிமுக – பாஜக கூட்டணி மீண்டும் உறுதியானது.
இதனைத் தொடர்ந்து ஜெயக்குமார் கடந்த சில நாட்களாகவே மவுனம் காத்து வருகிறார். ஊடகங்களும் ஜெயக்குமார் எங்கே..? என கேள்வி கேட்டு வந்தன. அத்துடன் ஜெயக்குமார் பாஜகவுக்கு எதிராக பேசிய பேட்டிகள் சமூக வலைதளங்களில் படுவைரலாகி வந்தன. அதேபோல், ஜெயக்குமாரும் தமது சமூக வலைதள பக்கத்தில் எந்த பதிவுகளையும் பதிவிடாமல் இருந்து வந்தார்.
இந்நிலையில் தான், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆனால், இந்த புத்தாண்டு வாழ்த்துக்கான புகைப்பட பதிவில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி படம் இடம் பெறவில்லை. ஜெயலலிதாவின் படம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. மேலும், அம்மாவின் குருகுல மாணவனாய் அவர் வழியில் நின்று எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு சிலர், எங்கசார் எடப்பாடியார் படம் மிஸ்ஸிங் என கேள்வி கேட்டு வருகின்றனர்.